சென்னை:இந்திய உச்ச நீதிமன்றம், சென்னை ஐஐடி இடையே செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக, நீதிமன்ற தீர்ப்புகளை மொழிமாற்றம் செய்யவும், நீதிமன்றத்தில் வாதாடும் போது அவரவர் மொழிகளில் அறிந்து கொள்ளும் வகையிலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி மொழி மாற்றம் செய்யப்பட்டு அளிக்கப்படுவதாகச் சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.
இது குறித்து, சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “நீதித்துறையில் மொழி என்பது சவாலாக உள்ளது. தீர்ப்புகளை ஆங்கிலத்தில் வாசிக்கும் போது, கேட்பவருக்குத் தமிழில் கேட்கும் விதமாகத் தொழில் நுட்பத்தை மேம்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் மூன்று மொழி பேசுபவர்கள் நீதிமன்றத்தில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
நீதிமன்ற வழக்குகளில் வாதாடும்போது நீதிபதி ஒரு மொழியில் பேசும் போது, மற்ற இருவரும் அவரவர் சார்ந்த மொழியில் கேட்கும் விதமாகத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை ஐஐடி மற்றும் உச்ச நீதிமன்றம் இடையே ஆகஸ்ட் மாதம் போடப்பட்டு, செயற்கை தொழில்நுட்பத்தை (AI) பயன்படுத்தி பணிகள் நடைபெற்று வருகிறது.