சென்னை:ஐஐடி மெட்ராஸ் சார்பில் தொழில் முனைவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப இணையம் மற்றும் முதலீட்டாளர்கள் மையம் இன்று (டிச.15) முதல் தொடங்கப்பட்டது. ஐஐடி மெட்ராஸில் கடந்த 13ஆம் தேதி முதல் இன்று (டிச. 15) வரை முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவர்களுக்கான சர்வதேச மாநாடு நடைபெற்றது.
இதில், புதிய தொழில்களுக்கான சிறந்த யோசனைகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சிறந்த யோசனைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த நிபுணர்களின் பரிந்துரை ஆகியவை வழங்கப்பட்டது. இந்த சர்வதேச மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து பல தொழில் முனைவோர்களும், முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டின் இறுதியில் புதிய தொழில் முனைவோர்களையும், முதலீட்டாளர்களையும் இணைக்கும் இணையதளம் மெட்ராஸ் ஐஐடி சார்பில் நிறுவப்பட்டது. இதன் செயல்பாட்டை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். ஏற்கனவே, ஐஐடி மெட்ராஸ் தொழில் முனைவோர்களுக்கான இன்குபேட்டர் சென்டரை நடத்தி வருகிறது.
இதில், புதிய தொழிலை தொடங்க நினைக்கும் இளம் பட்டதாரிகள் தங்களது அலுவலகங்களை அமைத்து ஆரம்ப கட்டங்களில் செயல்படலாம். அதன்படி, தற்போது ஐஐடி மெட்ராஸிடம் ஒரு லட்சத்து 96 ஆயிரம் புதிய தொழில்கள் ஆரம்பிக்க தேவையான தகவலும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களின் தொடர்பும் உள்ளதால், இந்த இணையதளம் புதிய தொழில் முனைவோர்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:சென்னை ஐஐடி 5ஜி நெட்வொர்க் தேஜாஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம்.. 6 ஜி நெட்வொர்க் தயாரிக்கும் பணிகள் துவக்கம்!