சென்னை:சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைந்துள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்கினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று (ஏப்ரல் 23) ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "ஐஐடி வளாகத்தில் மொத்தமாக 1420 பேர் பரிசோதனை மேற்கொண்டதில் 55 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை 30 பேருக்கு தொற்று உறுதி செய்யபட்ட நிலையில், இன்று மேலும் 25 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
XE வகை பாதிப்பு இல்லை: கரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகளுடன் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி மட்டுமே உள்ளது. அனைவரும் நலமுடன் உள்ளனர். ஐஐடி வளாகத்திலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் முன்னெச்சரிக்கையாக படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
விடுதியின் மூலம் தொற்று பரவியது தெரியவந்துள்ளது. வெளியூரிலிருந்து வந்த மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 17 பேர் மருத்துவமனையில் உள்ளனர். தமிழகத்தில் XE வகை பாதிப்பு இதுவரையில் கண்டறியப்படவில்லை.
தடுப்பூசி செலுத்துவதை விரிவுபடுத்த வேண்டும். தமிழக அரசின் கையிருப்பில் 1.56 கோடி டோஸ் தடுப்பூசி உள்ளது. 1.46 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை. தடுப்பூசி செலுத்தாதவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஒரே நாளில் மக்கள் வந்தாலும் நாங்கள் தடுப்பூசி போட தயாராக இருக்கிறோம்.
கரோனா பரவலைத் தடுக்க பள்ளி, கல்லூரி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் 3 அலையில் இருந்த பதற்றம் தற்போது தேவை இல்லை. இருப்பினும் கவனமுடன் இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனாவிற்கு புதிய மருந்து நல்ல செய்தியை வெளியிட்ட சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்!