சென்னை:சென்னை ஐஐடியில் பி.எஸ்சி டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, வெவ்வேறு வயதில் பல்வேறு சமூகப் பொருளாதாரப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் படித்து வருகின்றனர்.
பி.எஸ்சி பட்டப்படிப்பில், முதல் பிரிவில் 101 மாணவர்களில், கிட்டத்தட்ட 15 விழுக்காடு பேர் தொழில் வல்லுநர்கள். ஒன்பது மாணவர்கள் 20 வயதுக்குட்பட்டவர்கள். மூன்று மாணவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். முதல் பிரிவில் மேகாலயா, ஜம்மு மற்றும் காஷ்மீர், பிகார், ஜார்க்கண்ட் போன்ற தொலைதூர மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும் இருந்தும் படித்துவந்துள்ளனர்.
டேட்டா சயின்ஸ் படிப்பு:சென்னை ஐஐடி பி.எஸ்சி புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பானது ஜெஇஇ நுழைவுத்தேர்வு எழுதாமலேயே, மாணவர்கள் சேர்ந்து படிப்பதை சாத்தியமாக்கும் வகையில் உருவாக்கப்பட்ட பாடப்பிரிவாக உள்ளது.
பி.எஸ்சி டேட்டா சயின்ஸ் பிரிவில் படிப்பவர்களுக்கு அடிப்படை நிலையை முடித்த பிறகு சான்றிதழும், இரண்டாம் நிலைப்படிப்புகளை முடித்த பிறகு இரண்டு டிப்ளமோக்களும், இறுதி நிலைப் படிப்புகளை முடித்த பிறகு பி.எஸ்சி பட்டமும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பி.எஸ்சி டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பின் முதல் பிரிவில் படித்து வந்த 101 மாணவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, "மாணவர்கள் பிஎஸ்சி படிப்பை விரும்பிப் படிக்கின்றனர். ஐஐடியில் படிக்க வேண்டும் என்ற கனவை நிறைவேற்றி வைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சென்னை ஐஐடியின் எந்தவொரு ஆன்லைன் முயற்சிக்கும் முக்கிய அடையாளமாக பி.எஸ்சி படிப்பு மாறி வருகிறது.
அனைவருக்கும் சென்னை ஐஐடியின் கல்வி:இந்த நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்டுவர முயற்சிக்கிறது. சென்னை ஐஐடியின் கல்வி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் மாற்றி வருகிறோம். பி.எஸ்சி பட்டப்படிப்புத்திட்டம் இந்தியாவின் இளைஞர்களுக்கு ஒரு சம நிலைப்பாட்டை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. ஐஐடியில் படிப்பதில் உள்ள தடைகளை நீக்கி, தரமான கல்வியை அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக மாற்றி உள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய பி.எஸ்சி டேட்டா சயின்ஸ் பாடத்திட்ட பிரிவின் பேராசிரியர் ஆண்ட்ரூவ் தங்கராஜ் கூறும்போது, "டேட்டா சயின்ஸ் என்பது தகுதிவாய்ந்த ஆதாரங்களுக்கான அதிக தேவையுடன் வளர்ந்து வரும் வணிகமாகும். இந்தக் களத்தில் உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் இருந்து பயிற்சியளிக்கப்பட்டவர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடியின் வளர்ச்சியை தொற்றுநோயால் தடுக்க முடியவில்லை - இயக்குநர் காமகோடி