ஐஐடி மெட்ராஸ் - டீக்கின் பல்கலைக்கழகம் இணைந்து ஆராய்ச்சி அகாடமி தொடக்கம் சென்னை:ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டீக்கின் பல்கலைக் கழகம் (Deakin University) இணைந்து ஆராய்ச்சி அகாடமியைத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் ஆராய்ச்சியை மேற்கொள்ளவும், இரு நாட்டு மாணவர்களும் இணைந்து தொழில் துவங்கவும் வாய்ப்பு ஏற்படும் என ஐஐடி மெட்ராஸ்-ன் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து, ஆஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் இயன் மார்ட்டின் உடன் ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் காமகோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூறுகையில், "ஆஸ்திரேலியாவில் உள்ள டீக்கின் பல்கலைக் கழகம் மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகியவற்றுக்கு இடையே நீண்டகாலமாக கூட்டாண்மை இருந்து வருகிறது.
தூய்மையான எரிசக்தித் தீர்வு உள்ளிட்ட உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளில், மேலும் அதிநவீன ஆராய்ச்சியை உருவாக்கும் அடுத்தகட்ட முயற்சியில் ஈடுபட உள்ளோம். தூய எரிசக்தி, சிக்கலான தொழில்நுட்பங்கள், நிலைத்தன்மை, காலநிலை மாற்றம், சுகாதாரப் பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களுக்கு, அதிநவீன ஆராய்ச்சி மூலமாக ஆராய்ச்சியாளர்கள் முன்னோடித் தீர்வுகளைக் கண்டுபிடிக்க உள்ளோம்.
இரு நாட்டிற்கும் தேவையான ஆராய்ச்சிகளை மேற்கொள்வோம். மேலும், டீக்கின் கல்வி நிறுவனத்துடனான இந்த அகாடமியின் மூலம், ஐஐடி மெட்ராஸ் தனது தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி நிபுணத்துவம், சுற்றுச்சூழல் மேலாண்மை, சமூகப் பொறுப்புணர்வு செயல்திட்டங்கள் ஆகியவற்றைக் கொண்டு, வளரும் நாடுகளிடையே கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைத்தன்மையில் முன்னிலையை ஏற்படுத்தும்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் கூட்டாண்மையின் அடுத்தகட்டமாக இந்த ஆராய்ச்சி அகாடமி நான்காண்டு பி.எச்.டி பாடத்திட்டத்தை வழங்கும். இந்த ஆராய்ச்சி அகாடமி திறந்தவெளி புத்தாக்கச் சுற்றுச்சூழல் மற்றும் வலையமைப்பில் பங்கேற்பதுடன், இந்திய - ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள சிறந்த தொழில் நிறுவனங்களுக்கான ஒத்துழைப்பு வாய்ப்பையும் வழங்கும். புதுமையான ஆராய்ச்சியை ஊக்குவித்தல், சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முயற்சிக்கும்.
நான்கு ஆண்டுக்கான இணை பி.எச்.டி பாடத்திட்டத்தில் சேர்வோருக்கு, தொடக்கத்தில் சர்வதேச அளவிலான மிகச் சிறந்த ஆராய்ச்சிப் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படும். ஐஐடி மெட்ராஸ் டீக்கின் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆற்றல்மிகு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இரு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 30 பேருக்கு 2024ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. 5 ஆண்டுகளில் 150 ஆராய்ச்சிப் படிப்பிற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் இரு கல்வி நிறுவனங்களிலும் நேரத்தைச் செலவிட ஏற்பாடுகள் செய்யப்படும். இளநிலை மற்றும் முதுநிலையில் மாணவர்கள் இரட்டைப் பட்டம் பெறலாம். ஆஸ்திரேலியாவில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஐஐடி மெட்ராஸ்-ல் வந்து 3 ஆண்டுகள் விரிவுரையாளராகவும் பணியாற்றலாம். தொழில் துவங்குவதற்கும் அகடாமியின் மூலம் பயன்பெற முடியும்.
தேசிய கல்விக் கொள்கையில் சர்வதேசக் கல்வி குறித்து உள்ளது. அதேபோல் பிரதமரின் விஷன் 2047-ல் இந்தியா எப்படி இருக்க வேண்டும் என இருக்கிறது. ஜி 20 நாடுகளின் கருத்தரங்கிலும், சர்வதேச அளவிலான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு இந்த அகடாமி பயன்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:செய்ததும் - செய்யத் தவறியதும்.. திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி ஓர் சிறப்புப் பார்வை!