சென்னை:அதிக வட்டி தருவதாகக் கூறி 84,000 பேரிடம் சுமார் 6,000 கோடி ரூபாய் முதலீடு பெற்று ஏமாற்றியதாக ஐ.எப்.எஸ் நிறுவனத்தின் மீது புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இப்புகாரில், 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்குத் தொடர்புடைய 31 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ரூ. 1.12 கோடியும், ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள், 16 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான 49 அசையாத சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. வழக்கின் ஆவணங்களை அமலாக்கத்துறையினரும் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி கபிலன் குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க நிர்வாகிகளிடமிருந்து ரூ.32 லட்சம் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் டி.எஸ்.பி கபிலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, புதிய விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி ஜஸ்டின் ராஜ் நியமிக்கப்பட்டார்.