சென்னை: ஓடும் பேருந்தில் இளம்பெண்கள், பள்ளி மாணவிகள் மற்றும் சிறுமிகளுக்கு தொடர்ந்து இடையூறுகள் ஏற்படுவதாக புகார் வந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்கள் செய்து தமிழ்நாடு அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், “வாகனத்தில் பயணிக்கும் ஆண் பயணி, பெண்களை முறைத்துப் பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக புண்படுத்தக்கூடிய வகையிலான சைகைகள், பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல், புகைப்படங்கள் எடுத்தல் கூடாது.
பேருந்துகளில் யாரேனும் தொல்லை கொடுத்தால், குற்றம் செய்தவர் சிறுவராகவோ இளைஞராகவோ அல்லது முதியவராகவோ இருந்தாலும் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ், பேருந்து ஓட்டுநர் அல்லது நடத்துனர் புகார் தெரிவிக்கலாம்.
நடத்துனர் எச்சரிக்கை விடுத்தப் பிறகு, புகாருக்குள்ளான பயணியை இறக்கிவிடலாம் அல்லது வழியில் உள்ள ஏதேனும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம். வாகனத்தில் புகார் புத்தகத்தை பராமரிக்க வேண்டும். நடத்துநர் இல்லாதபோது, இவை அனைத்தும் ஓட்டுநரின் பொறுப்பு” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பயணிகள் குறுகிய நேரம் ஓய்வு எடுக்க கேப்சூல் ஓட்டல் - சென்னை விமான நிலையத்தில் திறப்பு