தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்.. அவசியம் ஏற்பட்டால் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்... ஓபிஎஸ்

கட்சியின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும் என்றும், அவசியம் ஏற்பட்டால் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்.. அவசியம் ஏற்பட்டால் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் - ஓபிஎஸ்
கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்.. அவசியம் ஏற்பட்டால் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் - ஓபிஎஸ்

By

Published : Aug 17, 2022, 6:14 PM IST

சென்னை: கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இன்று சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், “அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முன் இருந்த நிலையே நீடிக்கும். எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்துதான் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்த வேண்டும். தனிக்கூட்டம் நடத்தக்கூடாது. பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தால், 15 நாட்களில் நோட்டீஸ் வெளியிட்டு, 30 நாட்களில் பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட வேண்டும்.

இருவரும் இணைந்து கூட்டத்தை கூட்டுவதில் சிக்கல் ஏற்படும் பட்சத்தில், பொதுக்குழு கூட்டும் நடைமுறையை கண்காணிக்க ஆணையரை நியமிக்கும்படி நீதிமன்றத்தை நாடலாம்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் அடாவடியாக சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும், தொண்டர்களும், பொதுமக்களும் குறிப்பாக தெய்வமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்திருக்கிறது. கட்சியின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மாக்களுக்கு மரியாதை செலுத்தினேன்.

இந்த வெற்றி ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி. கட்சியின் நிறுவனரான எம்ஜிஆர், இந்த இயக்கத்தை தொண்டர் இயக்கமாக மாற்றினார். அவருக்குப்பின் ஜெயலலிதா இந்த தொண்டர்கள் இயக்கத்தை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக மாற்றினார். உயர் நீதிமன்றத்தீர்ப்பின் மூலம் கிடைத்த இந்த வெற்றியை ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

கடந்த சில மாதங்கள் அசாதாரணமான சூழலில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம், டெல்லி உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலோடு இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கி உள்ளது. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் வரலாற்றுச்சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது.

தொண்டர்கள் இயக்கத்தை யார் பிளவுபடுத்த நினைத்தாலும் நடக்காது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில், யார் யார் என்னென்ன பதவியில் இருந்தார்களோ அவர்கள் அதே பதவியில் தொடர்கின்றனர்.

பொதுக்குழுவில் தன்னை பல பேர் அவமதித்தாலும், ஒரு தலைமை பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் இத்தகைய அவமானங்களை எல்லாம் கருத்தில் கொள்ளக்கூடாது என அண்ணா தெரிவித்துள்ளார். பொதுக்குழு நடத்த வேண்டுமா என்பது குறித்து அவசியம் ஏற்பட்டால் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்" எனக் கூறினார்.

அவசியம் ஏற்பட்டால் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் - ஓபிஎஸ்

இதையும் படிங்க:ஈபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது - சென்னை உயர் நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details