தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாடுகளால் தொடரும் மரணங்கள்; இனி மாடுகளின் உரிமம் ரத்து - சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி..! - கால்நடைகள்

Chennai Cow Issue: சென்னை சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் இரண்டாம் முறையும் பிடிபட்டால், மாட்டின் உரிமை மற்றும் உரிமையாளர்களின் உரிமை ரத்து செய்யப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரம்
சென்னை சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 3:49 PM IST

சென்னை:சென்னை அரும்பாக்கத்தில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவியை மாடு முட்டிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சாலைகளில் சுற்றிவரும் மாடுகளைப் பிடிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று சென்னை நங்கநல்லூர் சாலையில் நடந்து சென்ற சந்திரசேகர் என்கிற முதியவரை அந்த வழியில் ஓடி வந்த 2 எருமை மாடுகள் முட்டியது. இதனால் படுகாயமடைந்த சந்திரசேகர் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக அவரை மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சந்திரசேகர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி சார்பில், இன்று காலை முதல் மீண்டும் சாலைகளைச் சுற்றித்திரியும் மாடுகளைப் பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வருகின்றனர். இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து, நங்கநல்லூர், கோயம்பேடு, திருவல்லிக்கேணி, ஆதம்பாக்கம் போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

முதல் முறை மாடு பிடிபட்டால் ரூபாய் 5 ஆயிரமும் இரண்டாம் முறை பிடிபட்டால் ரூ 10 ஆயிரமும் என அபராதத்தை மாநகராட்சி சார்பில் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் சுமார் 1 கோடி ரூபாய் வசூலித்தாலும், மீண்டும் மீண்டும் அதே பிரச்சனைகள் தான் வந்து கொண்டிருக்கிறது. மாட்டின் உரிமையாளர் சிலர் மாடு பிடிக்கும் வண்டி வரும் போதும் மாடுகளைக் கட்டி வைப்பது போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.

மாநகராட்சி பகுதியில், இரண்டாம் முறையும் மாடு பிடிபட்டால், மாட்டின் உரிமை மற்றும் உரிமையாளர்களின் உரிமை ரத்து செய்வது தான் ஓரே வழி எனத் தெரிவித்தார். மேலும், இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த 2023 ஆண்டில் மட்டும் இதுவரை 4,237 கால்நடைகளைப் பிடித்துள்ளோம். இதில் 92.63 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 2024 ஆம் ஆண்டில் 8 ஆம் தேதி வரை 42 கால்நடைகளைப் பிடித்துள்ளோம். இதில் 75 ஆயிரம் வரை அபராதம் வசூலித்துள்ளோம். மேலும், நேற்றைய தினத்தில், நங்கநல்லூர் பகுதியில் அந்த ஒரு எருமை மாட்டினையும் சேர்ந்து 14 மாடுகள் பிடித்துள்ளோம்.

தொடர்ந்து, சென்னையில் சுற்றித்திரியும் மாடுகளைச் சென்னை மாநகராட்சி சார்பில் பிடித்து வருகிறோம். செப்டம்பர் மாதம் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் மாடு பிடித்தால் முதல் நாள் ரூபாய் 2 ஆயிரம் (பராமரிப்பு ரூ 200) என்று, இரண்டாம் நாள் ரூபாய் 5 ஆயிரம் (பராமரிப்பு ரூ. 1000) என்றும், மூன்றாம் நாள் ரூபாய் 10 ஆயிரம் (பராமரிப்பு ரூ. 1000) என்றும் அபராதம் வசூலிக்கப்படும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இது குறித்து விலங்குகள் நல ஆர்வலர் கூறுகையில், “வீட்டில் வளர்க்க வேண்டிய கால்நடைகள் எவ்வித கட்டுப்பாடின்றியும் மக்கள் நடமாடும் பகுதிகளிலும், அதிக போக்குவரத்து மிகுந்த சாலைகளில் மாடுகள் திரியும் பொழுது தான், இத்தகைய விபத்துகள் சென்னையில் அதிகமாக தற்போது நிகழ்கின்றன. மேலும், இந்திய அளவில் கால்நடைகளின் எண்ணிக்கை சுமார் 514 மில்லியன் உள்ளது அதாவது இந்திய மக்கள் தொகையில் பாதி அளவிற்கான கால்நடைகள் இந்தியாவில் இருக்கின்றன என்று ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது. பெருநகர சென்னையில், 30 % விபத்துகள் கால்நடைகளால் ஏற்படுகின்றன” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பேருந்துகள் சகஜமாக இயங்குவதாக கூறுவது உண்மையில்லை - சிஐடியு சவுந்தரராஜன் கடும் தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details