சிலை கடத்தல் வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை எனக் கூறி தமிழ்நாடு அரசிற்கு எதிராக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் வாதிட வேறோரு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அரசு தரப்பில் கோரப்பட்டது.
சிலை கடத்தல் வழக்கு விசாரணைக்காக கும்பகோணம் நீதிமன்றத்திற்கு செல்லும் அலுவலர்களுக்கு எந்த வசதியும் செய்து தரப்படவில்லை என்று பொன்.மாணிக்கவேல் புகார் தெரிவித்தார். இதையடுத்து, சிலை கடத்தல் வழக்குகளின் முதற்கட்ட விசாரணையை சிறப்பு அதிகாரியின் குழு நடத்தக் கூடாது என்றும், அவர்களுக்கு வழக்கின் ஆவணங்களை கொடுத்தால் பணியிடை நீக்கம் செய்ய நேரிடும் என ஆய்வாளர்களை ஏடிஜிபி ஒருவர் மிரட்டுவதாகவும், இது நாடா? இல்லை காடா? என சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் வேதனையோடு தெரிவித்தார்.
மேலும், ஜனவரி முதல் தற்போது வரை சிலை கடத்தல் தொடர்பான புகார்களில் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார். இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து பதிலளிக்க கால அவகாசம் கோரிய அரசு தரப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் அரசு தரப்பு தவறாக நடந்துகொள்வது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் சிறப்பு அதிகாரி குழுவுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலக துப்புரவு பணியாளர்களுக்கு கூட அரசால் ஊதியம் வழங்க முடியாதா? என கேள்வி எழுப்பினர்.
மேலும், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரி முதற்கட்ட விசாரணை நடத்துவதை ஏடிஜிபி எவ்வாறு தடுக்க முடியும் என சாடிய நீதிபதிகள், இந்த வழக்கில் அரசின் கொள்கையை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் உயர் காவல் அதிகாரிகளின் ஒப்புதல் பெற்றுதான் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.