இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட உலகின் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கேட்டு எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடைபெற்றுவருகிறது. இந்தப் பேரணிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மனிதநேய ஐனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து பேசிய திருமாவளவன், "முள்ளிவாய்க்கால் படுகொலை அரங்கேறி 10 ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்ட நிலையில், இன்னும் சிங்கள இனவெறி போர்க்குற்றவாளிகளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிப்பதற்கான முகாந்திரம் எதுவும் நிகழாமல் இருப்பது அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது.
ஐநா பேரவை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ச்சமூகம் இந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உரக்க முழங்கிக் கொண்டிருப்பதாகவும், தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னையில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடைபெற்றிருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது" என்று கூறினார்.
ஐநா பேரவையும் சர்வதேச சமூகமும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ராஜபக்ச உள்ளிட்ட சர்வதேச போர்க்குற்றவாளிகளை சர்வதேச பன்னாட்டு புலனாய்வு விசாரணைக்கு ஆட்படுத்த வேண்டும் எனவும் திருமாவளவன் கேட்டுக்கொண்டார். அரசியல் ரீதியான முரண்பாடுகள் இருந்தாலும் அவர்களைக் காப்பாற்ற மைத்ரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க அரசு துணை நிற்பதாகவும் விசிக தலைவர் குற்றஞ்சாட்டினார்.