சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூரைச் சேர்ந்த வரதராஜன்(55) என்பவர், உடல்நிலை குறைவு காரணமாக கடந்த 2ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்றுவிட்டு கடந்த 4ஆம் தேதி வீட்டிற்குச்சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து புதுபெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் வரதராஜன் புகார் அளித்தார்.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் ஒருவர் வீட்டினுள்ளே சென்று கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதையடுத்து மர்மநபரின் அடையாளங்களை வைத்து போலீசார் கொள்ளையனைத் தேடி வந்த நிலையில், பத்து நாட்களுக்குப் பிறகு எழும்பூர் பகுதியில் சாலை ஓரத்தில் வசித்துவரும் அன்புராஜ் (33) என்பவரை கைது செய்துள்ளனர். அவரை பீர்க்கன்காரணை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை செய்ததில், பெருங்களத்தூரில் மட்டும் கடந்த நான்கு மாதத்தில், நான்கு வீடுகளில் கொள்ளையடித்தாகத் தெரிவித்தார்.
கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் கொள்ளையடித்த நகைகள் குறித்து கேட்டபோது, அந்த நகைகளை விற்று சாலையோரம் மற்றும் ரயில் நிலையத்தில் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொடுத்ததாகத் தெரிவித்தார்.
பின்னர் அவரிடம் இருந்து 11 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்த போலீசார், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: அட்வைஸ் பண்ண ஆசிரியர் மண்டை உடைப்பு.. விழுப்புரம் பகீர் சம்பவம்!