உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், குடியுரிமை திருத்த சட்ட மசோதா போன்ற பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளில், இன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளது. இக்கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்த மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு எதிராக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் தோண்ட "சுற்றுச்சூழல் அனுமதியும்" "மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டமும்" தேவையில்லை என்று, சுற்றுச்சூழலையும் வெகுமக்கள் எண்ணத்தையும் பின்னுக்குத் தள்ளிச் சிறுமைப்படுத்தி, மத்திய பாஜக அரசு கார்ப்பரேட் அணுகுமுறையுடன் அறிவித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவிரி டெல்டா பகுதிகள் உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் ஏற்கனவே 341க்கும் மேற்பட்ட ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்டும் 20 ஆயிரம் கோடி ரூபாய் திட்டத்தில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளித்து, வேளாண் மண்டலம் என்பதற்குப் பதிலாக, அதைப் பாழ்படுத்தி ரசாயன மண்டலமாக்கும் மத்திய பாஜக அரசு, இதுமாதிரி பின்னடைவான உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கி - விவசாயிகளின் வயிற்றிலடித்து, அவர்களுடைய வாழ்வாதாரத்தை அடியோடு நாசப்படுத்தும் இந்த அனுமதிகள் எதிர்கால சமுதாயத்தையும் - தமிழகத்தையும் மிக மோசமான சுற்றுச்சூழல் ஆபத்துகளுக்கு உள்ளாக்கும் செயலாகும். மனிதநேயம் சிறிதேனும் இன்றி எடுக்கப்படும் இந்த முடிவுகள், மனிதகுலத்திற்கே பேரிடராக முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.