தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி - மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: "தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்த ஆய்வுகளுக்கு அனுமதி அளிப்பது என்பது மத்திய அரசு உறுதியளித்த நிலைப்பாட்டுக்கு எதிரானது" என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ்

By

Published : Apr 22, 2019, 5:45 PM IST

Updated : Apr 22, 2019, 7:20 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,

தமிழ்நாட்டில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 40 இடங்களில் ஹைட்ரோ கார்பன் வளங்களை கண்டறிவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரி பாசன மாவட்டங்களிலும், விழுப்புரம் மற்றும் புதுவையிலும் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்கும் திட்டத்தின் ஒரு கட்டமாக இதுவரை 4 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இரு திட்டங்களுக்கான உரிமம் வேதாந்தா நிறுவனத்திற்கும், ஒரு திட்டத்திற்கான உரிமம் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் வழங்கப் பட்டுள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான நடந்த போராட்டம்

ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தின்படி மொத்தம் 67 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. அவற்றில் 27 இடங்களில் ஆய்வு நடத்துவதற்கான அனுமதி கடந்த 14 ஆம் தேதி அளிக்கப்பட்டு விட்ட நிலையில், மீதமுள்ள 40 இடங்களில் ஆய்வு செய்ய இப்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது காவிரி பாசன மாவட்டங்களை மிக மோசமாக பாழாக்கி விடும்.

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்த ஆய்வுகளுக்கு அனுமதி அளிப்பது என்பது மத்திய அரசு உறுதியளித்த நிலைப்பாட்டுக்கு எதிரானது. காவிரிப் பாசன மாவட்டங்களில் இதுவரை மீத்தேன், பாறை எரிவாயு திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. இனியும் அத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படாது’’ என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பலமுறை மக்களவையில் பதிலளித்திருந்தார். ஆனால், அதற்கு முற்றிலும் எதிரான வகையில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதித்திருப்பதை ஏற்கவே முடியாது.

நெடுவாசல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மட்டும்தான் அனுமதி அளித்துள்ளோம்; மீத்தேன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறி மத்திய அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில், இந்த இரண்டுக்கும் இடையே எந்த வித்தியாசமும் கிடையாது. மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள Open Acreage Licencing Policy என்ற கொள்கைப்படி ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக ஒரு உரிமம் மட்டும் பெற்றுக் கொண்டால் அதை வைத்துக்கொண்டே அப்பகுதியில் கிடைக்கும் மீத்தேன், ஈத்தேன் உள்ளிட்ட அனைத்து வகையான கரிம எரிபொருட்களையும் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி, ஹைட்ரோ கார்பன் வளமும் மீத்தேன் எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் நீரியல் விரிசல் என்ற இயற்கைக்கு எதிரான முறையைப் பயன்படுத்தி தான் எடுக்கப்படும். அதனால், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினாலும் மீத்தேன் திட்டத்தால் ஏற்படும் அனைத்து வகையான சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் ஏற்படும். ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு இப்போது அளிக்கப்பட்டுள்ள அனுமதி மட்டுமின்றி, மற்ற நிறுவனங்களுக்கும் தொடர்ந்து சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்படவுள்ளது.

வேதாந்தா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள இரு உரிமங்களின்படி 247 இடங்களில் ஆய்வு நடத்த அனுமதி அளிக்கப்படவுள்ளது. நான்காவது உரிமத்தின்படி 471.19 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும், விரைவில் வழங்கப்படவுள்ள இரு உரிமங்களின்படி 1863.24 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்போது காவிரி பாசன மாவட்டங்கள் மட்டுமின்றி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களும் வளம் கொழிக்கும் பூமி என்ற நிலையிலிருந்து பாலைவனமாக மாற்றி விடும்.

ஹைட்ரோ கார்பன் திட்டம்

ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், உணவுக்காக மற்ற மாநிலங்களிடமும், வெளிநாடுகளிடமும் கையேந்தி நிற்கும் நிலை தமிழகத்திற்கு ஏற்படும். இந்த அவலநிலையைத் தடுக்கும் வகையில் ஹைட்ரோகார்பன் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு வழங்கப் பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Last Updated : Apr 22, 2019, 7:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details