சமீபத்தில் மின்கசிவினால் குளிர்சாதனப் பெட்டி வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் மூச்சு திணறி உயிரிழந்தனர். இந்த சோகம் மறைவதற்குள் சென்னை போரூரில் மின் கசிவு காரணமாக ஏசியில் தீப்பற்றி கணவன், மனைவி இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் ஏசி விபத்துகள்; கணவன், மனைவி தீக்காயம்! - injury
சென்னை: போரூரில் மின் கசிவு காரணமாக ஏசி வெடித்ததில் கணவன் மற்றும் மனைவிக்கு தீக்காயம் ஏற்பட்டது. தொடரும் ஏசி விபத்துக்களால் மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது.
போரூர் சக்தி நகரை சேர்ந்தவர் பிரகாஷ்(55). இவர் தனது மனைவி பிந்து (45), மகள்கள் கிரன், ஆதித்யா ஆகியோர் உடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றார். நேற்று இரவு வீட்டின் ஏசி சரியாக வேலை செய்யாததால் அதனை ஆப் செய்யாமல் அருகில் உள்ள அறையில் தூங்க சென்று விட்டனர். இந்நிலையில், குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் வந்ததால் ஏ.சியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து வெடித்துள்ளது. தீ வீடு முழுவதும் பரவ தொடங்கியது. தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் கணவன், மனைவி இருவருக்கும் தீ காயம் ஏற்பட்டது.
இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதில், தீக்காயமடைந்த கணவன் மனைவி இருவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.