சென்னை எழிலகத்தில் தென்மேற்கு பருவமழை, ஆம்பன் சூறாவளி புயல் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுரையின்படி கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு, தென்மேற்கு பருவமழை தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் நிர்வாக ஆணையர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து விரிவான சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி கடந்த 16.05.2020 அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து வலுப்பெற்ற தீவிர சூறாவளி புயலான “ஆம்பான்” தற்போது அதிதீவிர சூறாவளி புயலாக மாறி தெற்கு வங்காள விரிகுடாவில் மத்திய பகுதியிலிருந்து வடக்கு வடகிழக்கு நோக்கி மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கின்றது.
இன்று அதிகாலை 2.30 மணிக்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள பாராதீப் துறைமுகத்திலிருந்து தெற்கு முகமாக 820 கி.மீ தூரத்திலும், மேற்கு வங்காளத்தில் உள்ள திகா என்ற இடத்திலிருந்து தெற்கு தென்மேற்கு முகமாக 980 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்த புயல், வடக்கு – வடகிழக்காக நகர்ந்து வடமேற்கு வங்காள விரிகுடா மற்றும் மேற்கு வங்காளம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மத்திய, தெற்கு மற்றும் வடக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் கடல் மிகவும் சீற்றத்துடனும் அலைகள் அபாயகரமான அளவில் உயர்ந்து காணப்படும்.
கடல் சீற்றத்துடன் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் இன்று முதல் 20ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் வங்கக் கடல், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை உயர்ந்தப்பட்ச வெப்பநிலை குறித்து எச்சரிக்கை ஏதும் இல்லை.