சென்னை:கடந்த 20ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ஆகியப்பகுதிகளில் இருந்து செயல்படும் ஜெயபாரத் பிளாஷ்வே சிட்டி, அன்னை பாரத் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களிடமும், ஆர்.ஆர். கன்ஸ்ட்ரக்சன் எனப்படும் நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே அரசு ஒப்பந்தங்களை செய்யும் நிறுவனம் தொடர்பான இடங்களிலும் வருமானவரித்துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேலாக இந்த இரண்டு குழுமங்களுக்குச்சொந்தமான 30 இடங்களுக்கும் மேலாக வருமானவரித்துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக மதுரை, திண்டுக்கல், சென்னை ஆகியப்பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனைகளின் முடிவில் அதிக அளவிலான முக்கிய ஆவணங்களும், டிஜிட்டல் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஜெயபாரத் கிளாஸ்வே சிட்டி உள்ளிட்ட ரியல் எஸ்டேட் குழுமம் தொடர்பான சோதனையில் மிகப்பெரிய அளவில் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அதிகளவு ரொக்கமாக பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்று கணக்கில் வராத ரொக்கப் பரிமாற்றங்களை கணக்கில் வைத்துக்கொள்வதற்கு தனியாக சாப்ட்வேர் பயன்படுத்தி கணக்குகளை கையாண்டதாகவும் அலுவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.