சென்னை: கள்ள நோட்டு மோசடி வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் கள்ள நோட்டு கும்பல் பிடிபட்டது குறித்து விளக்கியுள்ளார். "நேற்று மாலை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் காய்கறி வைத்திருக்கும் மணி என்பவர், 4 கள்ள நோட்டுகள் கொண்டு வந்து ஒருவர் காய்கறி வாங்க வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
மணி கொடுத்த புகாரின் பேரில் கள்ள நோட்டு வைத்திருந்த அண்ணாமலை என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, கள்ள நோட்டை கொடுத்தவர் விருகம்பாக்கத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பது தெரியவந்ததையடுத்து, அவரையும் கைது செய்து, அவரது வீட்டை சோதனை செய்த போது, 90 பண்டல்களில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் என 45 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி பிரிண்டிங் மிஷின், பேப்பர் கட்டிங் மிஷின் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது" என கூறினார்.
மேலும் இவர்களிடம் நடத்திய புலன் விசாரணையில், இவர்கள் 5 மாதம் முன்பு வடபழனியில் உள்ள ஒரு பிரஸ்ஸில் 50 லட்ச ரூபாய் கள்ள நோட்டை அச்சடித்தது தெரியவந்ததுள்ளதாகவும், பின்னர் சுப்பிரமணி அவரது நண்பரான அண்ணாமலையிடம் கள்ள நோட்டை கொடுத்து, 5 முறை காய்கறி வாங்கியதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அண்ணாமலை என்பவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதையும், சுப்பிரமணி என்பவர் வழக்கறிஞராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். குறிப்பாக இவர்கள் அசல் ரூபாய் நோட்டு போல அச்சடித்து, அதை புழக்கத்தில் விட்டதும் விசாரணையில் தெரியவந்ததாக தெரிவித்தார்.