விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சாலை கட்டுமான ஒப்பந்தங்களை எடுத்து செய்யும் நிறுவனம் எஸ்.பி.கே. இந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த செய்யாதுரை மற்றும் அவரது மகன் நாகராஜ். இந்த நிறுவனம் மற்றும் மற்றொரு அரசு ஒப்பந்ததாரரான எஸ்.பி வேலுமணியின் நெருக்கமானவரான சந்திரசேகர் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறையினர் அவர்களுக்கு தொடர்புடைய 40 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் இந்த நிறுவனங்கள் கணக்கில் வராத பணம் 500 கோடி ரூபாயை மறைத்து வைத்திருந்ததை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த செய்யாதுரை கசாப்பு கடைக்கு ஆட்டுத் தோல் மற்றும் ஆடுகள் விற்கும் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
அதன் பின் அதிமுகவில் உறுப்பினராகி கமுதி ஒன்றிய செயலாளர் ஆக பொறுப்பை பெற்றுள்ளார்.செய்யாதுரை எஸ்.பி.கே என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி கிராம சாலைகள், பழுதடைந்த சாலைகள் என சிறிய சிறிய வேலைகளை கான்ட்ராக்ட் எடுத்து செய்துள்ளார். அதிமுகவின் முக்கிய அமைச்சர்களுடன் ஏற்பட்ட தொடர்பை பயன்படுத்தி நெடுஞ்சாலை சம்பந்தமான பல ஒப்பந்தங்களை செய்யாதுரை பெற்றுள்ளார்.
இதனை அடுத்து செய்யாதுரையின் மகனான நாகராஜ் கட்டுமான பொறியியலில் பட்டம் பெற்று, சென்னை சென்று முக்கிய அமைச்சர்களின் மகன்களுடன் நட்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு எஸ்பிகே ஸ்பின்னர்ஸ்”, ”ஸ்ரீ பாலாஜி டோல்வே மதுரை லிமிட்டெட்” மற்றும் ”எஸ்பிகே அண்ட் கோ எக்ஸ்பிரஸ்வே” ஆகிய நிறுவனங்களை தொடங்கி பல கோடி அரசு ஒப்பந்தங்களை பெற்றதாக கூறப்படுகிறது.அதிலும் குறிப்பாக ஸ்ரீ பாலாஜி டோல்வே நிறுவனம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி சுப்பிரமணியத்திற்கு பங்கிருப்பதாக கூறப்படுகிறது.