சென்னை: தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி தரமான மருத்துவ கல்லூரிகள் நாடு முழுவதும் தொடங்கப்பட வேண்டும். தகுதியான மருத்துவ பேராசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு தரமான மருத்துவக் கல்வி அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 2020 ஆம் ஆண்டு பல்வேறு விதிமுறைகளும் கொண்டு வரப்பட்டன.
இதன்படி குறைந்தபட்சம் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்கப்படும்போது 300 படுக்கை வசதிகளும் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு அனைத்து வசதிகளுடன் முழுமையாக செயல்பட்டு இருக்க வேண்டும் என்ற தகுதி உள்ளது. இதுபோன்ற அடிப்படைத் தகுதி மற்றும் ஆய்வு மேற்கொண்ட பிறகுதான் மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி: இதன் தொடர்ச்சியாக ‘எசன்ஸ்யலிட்டி சர்டிபிகேட்’ என்ற அனுமதியை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் அனுமதியை முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முறைகேடாக வழங்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இதுபோன்று அனைத்து அனுமதிகளும் பெற்ற பிறகு மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறையில் உள்ளது. இந்நிலையில் வேல்ஸ் கல்வி குழுமத்தின் தலைவரான ஐசரி கணேஷ், கடந்த 2019 ஆம் ஆண்டு திருவள்ளூரில் வேல்ஸ் மருத்துவக்கல்லூரியை 150 மாணவர் இருக்கைகளுடன் நடத்துவது தொடர்பாக அனுமதி கேட்டு மாநில சுகாதாரத் துறைக்கு விண்ணப்பித்துள்ளார்.
சேலம் மருத்துவர் குழு: இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் 2020 ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்திலிருந்து மருத்துவ கல்வி இயக்குனரத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 150 மாணவர்கள் படிப்பதற்கு ஏற்றார்போல் தேசிய மருத்துவ ஆணைய விதிப்படி உள்ளதா என ஆய்வு செய்யுமாறு மருத்துவக் கல்வி இயக்குநரத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது.
இதன் அடிப்படையில் வேல்ஸ் மருத்துவக்கல்லூரியை ஆய்வு செய்வதற்கு, சேலம் குமாரமங்கலம் அரசு மருத்துவக்கல்லூரியில் பணிபுரியும் நான்கு மருத்துவர்களை மருத்துவக் கல்வி இயக்குனரகம் நியமித்தது. இந்த குழுவில் சேலம் மருத்துவக்கல்லூரியை சேர்ந்த பாலாஜி நாதன், சுஜாதா, குமாரவேல் மற்றும் மனோகர் ஆகிய நான்கு மருத்துவர்கள் அடங்கிய குழு வேல்ஸ் மருத்துவக்கல்லூரியை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டது.
இந்த ஆய்வு மேற்கொள்ளும்போது மருத்துவர் குமாரவேல் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவர் வசந்தகுமார் என்பவர் ஆய்வுக் குழுவில் இடம் பெற்றார். இதன் அடிப்படையில் நான்கு பேர் கொண்ட மருத்துவ குழு, வேல்ஸ் மருத்துவக்கல்லூரியில் கடந்த நவம்பர் 2020 ஆம் ஆண்டு ஆய்வு மேற்கொண்டது.
குறிப்பாக ரத்த வங்கி செயல்படுவது, நில ஆவணங்கள், ஆப்ரேஷன் தியேட்டர்கள், புற நோயாளிகளுக்கு தேவையான வசதி, படுக்கை வசதி, கல்லூரியில் உட்கட்டுமான வசதி, 150 மருத்துவ மாணவர்கள் படிப்பதற்கான வசதி உள்ளிட்டவற்றை மருத்துவ குழு ஆய்வு செய்து கடந்த நவம்பர் 16 ஆம் தேதி மருத்துவக்கல்வி இயக்குனரகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தது.
புதிய மருத்துவ குழு: இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திடீரென வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மற்றொரு மருத்துவர்கள் அடங்கிய குழு சோதனை மேற்கொண்டது. இந்த திடீர் சோதனையின்போது வேல்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் போதுமான வசதிகள் இல்லை என்பது தெரிய வந்தது.
மேலும் தேசிய மருத்துவமனை ஆணைய விதிகளை முறையாக பின்பற்றப்படவில்லை என அறிக்கையில் புதிய மருத்துவ குழுவால் சமர்ப்பிக்கப்பட்டது.
அதேநேரம் விதிப்படி 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில், குறைந்தபட்சம் 60% நோயாளிகள் சிகிச்சை பெற்று முழுமையாக இரண்டு வருடம் செயல்பட வேண்டும் என்ற தேசிய மருத்துவமனை ஆணைய விதிகள் மீறப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் உதவி இயக்குனர் நகர்ப்புற திட்ட துறை அலுவலர்கள் ஜூன் மாதம் 2020 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ ஆணைய விதிப்படி கட்டுமானம் இன்னும் முழுமை பெறவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.