அரும்பாக்கம், திருவேங்கட கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் ஸ்ரீராம் (வயது 19), பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர்களது வீட்டில் சில ஆண்டுகளாக ராஜா என்பவர் குத்தகைக்கு வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் (செப்.23) மதியம், வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு காலியான வீட்டிற்கு ராஜா குடும்பத்தினர் பூட்டு போட்டுள்ளனர்.
அப்போது பூட்டை வீட்டின் உரிமையாளர் மகன் ஸ்ரீராம் உடைக்க முற்பட்டதில், இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதில், இரண்டாவது மாடியிலிருந்து ஸ்ரீராம் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், அரும்பாக்கம் காவல் துறையினர் இதனைக் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குத்தகைக்கு இருக்கும் ராஜா, வீட்டின் உரிமையாளர் குப்புசாமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் குத்தகையும் மேலும் இரண்டு லட்சம் ரூபாய் கடனாக வாங்கிக் கொடுத்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து, அந்தக் கடன் தொகைக்கு குப்புசாமி வட்டி செலுத்தாத நிலையில், தனக்கு பணம் கொடுக்கும் வரை மேல் வீட்டிற்கு யாரும் வாடகைக்கு வரக்கூடாது எனக்கூறி காலியாக இருந்த மேல் வீட்டிற்கு ராஜா தரப்பினர் பூட்டு போட்டுவிட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து அந்தப் பூட்டை ஸ்ரீராம் உடைக்க முற்பட்டபோது ஏற்பட்ட தகராறில், மாடியில் இருந்து ஸ்ரீராம் தள்ளி விடப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ராஜாவின் மகன் சங்கர் (வயது 28), மற்றும் ராஜாவின் மனைவி பானு (வயது 46), ஆகிய இரண்டு பேரைக் கைது செய்து அரும்பாக்கம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள ராஜாவை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.