சென்னை: தமிழக ஆளுநர் மாளிகை பிரதான நுழைவாயில் முன்பு பெட்ரோல் குண்டு எனப்படும் மொலோடோவ் காக்டெய்ல் வீசப்பட்ட சம்பவம் தமிழகத்தில் தற்போது அதிகமாகப் பேசும் பொருளாக உள்ளது. இது தொடர்பாக ரவுடியான கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை ஐபிசி 124ன் கீழ் பதிய வேண்டும் என்று தொடர்ந்து பல்வேறு சம்பவங்களில், தமிழக காவல் துறையைத் தமிழக ஆளுநர் மாளிகை விமர்சித்து வருவதால் இந்த சம்பவத்தின் தாக்கம் குறையாமல் உள்ளது. ஆனால் பெட்ரோல் குண்டு வீச்சு என்பது மிகப்பெரிய தாக்குதலா? என்று மக்கள் நினைத்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த மொலோடோவ் காக்டெய்ல் என்றால் என்ன? என்பது பலரது மத்தியில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.
இந்த மொலோடோவ் காக்டெய்ல் கடந்து வந்த பாதை: இந்த மொலோடோவ் காக்டெய்ல் முதன் முதலில், 1936-ஆம் ஆண்டு முதல் 1939-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஸ்பானிய உள்நாட்டுப் போரில் தான் உபயோகிக்கப்பட்டது என்ற வரலாற்றுச் சுவடுகள் தெரிவிக்கிறது.
இதற்கு அதிகாரப்பூர்வ பெயரான 'மொலோடோவ் காக்டெய்ல்' எனப் பெயரிடப்பட்டது. எப்போது என்றால் சோவியத்திற்கும் - பின்லாந்துக்கும் 1939ஆம் ஆண்டின் இடைய நடைபெற்ற பனிப்போரில் சோவியத் நடத்திய வான்வெளி தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல போராட்டங்களானது நடைபெற்றது.
இதற்குச் சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் 'வியாசஸ்லாவ் மொலோடோவ்' ஊடகங்களில், "நாங்கள் வான்வெளி தாக்குதலை நடத்தவில்லை அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில், வானத்திலிருந்து உணவுகளை அளித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கான பதில் தாக்குதலில் சோவியத்தின் பீரங்கிகளில் வீசப் பயன்படுத்தப்பட்ட பெட்ரோல் குண்டுகளுக்கு 'மொலோடோவ் காக்டெயில்' என்று பின்லாந்து வீரர்கள் பெயர் வைத்தனர்.