தக்ஷிண பாரத் இந்தி பிரசார சபா பொதுச்செயலாளர் ஜெயராஜ் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், " இந்தி பிரசார சபாவின் சார்பில் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரு பருவங்களில் இந்தித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த இந்தித் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டுதான் உள்ளது.
கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தேர்வில் சென்னையிலிருந்து மட்டும் 70 ஆயிரம் பேரும், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து 1 லட்சத்து 25 ஆயிரம் பேரும் தேர்வு எழுதியுள்ளனர். தற்போது மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வால், அதிகளவிலான மாணவர்கள் இந்தி படிக்க விரும்புகிறார்கள். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் இந்தி படிக்க வேண்டும் என விரும்புகின்றனர்.
அதனால், பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடங்களைத் தேர்வு செய்வது போல், இந்தியையும் தேர்வு செய்கின்றனர். இந்தியாவிலேயே அதிகம் பேசக்கூடிய மொழியான இந்தி தெரிந்திருந்தால், வேலைவாய்ப்பும் கிடைக்கும். இந்தி பிரசார சபாவின் மூலம் ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேர்வுகளை நடத்துகிறோம்.