1. 2021-22 ஆம் ஆண்டில் வேளாண்மை, சார்புத்துறைகளுக்கு ரூ.34,220.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், சர்க்கரைத்துறை, விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத்துறை கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம், கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை, நீர்வள ஆதாரத்துறை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை போன்ற உழவர் நலன் சார்ந்த துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் பலன்கள் ஒட்டு மொத்த கிராம வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஒருங்கிணைக்கப்படும். இதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.34,220.65 கோடி நிதி ஒதுக்கீடு.
2. ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் நடப்பாண்டில் 2500 கிராமங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிப் பரப்பினை உயர்த்தி, விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கான திட்டப்பணிகளுக்காக ரூ.250 கோடி மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு. ஒன்றிய, மாநில அரசுத் திட்டங்களை ஒன்றிணைத்து, ரூ.995.45 கோடி, ஆக மொத்தம் ரூ.1,245.45 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
3. நெல் விவசாயிகளின் நலனுக்காக, நெல்லிற்கான கொள்முதல் விலை சாதாரண ரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,015 ம், சன்ன ரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,060 என உயர்த்தி நிர்ணயம். இதற்கான கூடுதல் செலவினத்தொகை ரூ.99.38 கோடி, ஆக மொத்தம்ரூ.319.38 கோடி ஒதுக்கீடு.
4. சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், பயிர் சாகுபடி மட்டுமல்லாது இதர தொழில்களையும் மேற்கொண்டு, ஆண்டு முழுவதும் வருமானம் ஈட்ட வல்ல ஒருங்கிணைந்த பண்ணையம், கூட்டுப்பண்ணையத்திற்காக ரூ. 119.402 கோடி ஒதுக்கீடு.
5. விவசாயிகளின் பம்ப்செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக தமிழ்நாடு மின்வாரியத்திற்கு ரூ. 4,508.23 கோடி நிதி ஒதுக்கீடு.
6. பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் விவசாயிகளின் சார்பாக, காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்காக ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு.
7. முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத்திட்டத்தின் மூலம் ஒரு இலட்சம் மாடித்தோட்ட தளைகள் விநியோகம், காய்கறி விதைத் தளைகள் விநியோகத்திற்காக ரூ.95 கோடி நிதி ஒதுக்கீடு
8. நுண்ணீர் பாசனத்திட்டத்தின்கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் தொடர்ந்து மானியம் வழங்கி, 1,50,000 எக்டரில் செயல்படுத்திட ரூ. 982.48 கோடிநிதி ஒதுக்கீடு.
9. முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், நடப்பாண்டில், தொகுப்பு அணுகுமுறையில் 7.5 இலட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் 3 இலட்சம் விவசாயிகள் பலன்பெறும் வகையில், ரூ,146.64 கோடி நிதி ஒதுக்கீடு.
10. ரூ.140 கோடி மானியத்தில் வேளாண் இயந்திரமயமாக்குதல் திட்டம்.
11. முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ், 70 சதவிகித மானியத்தில் 5,000 விவசாயிகள் பயன்பெறுவதற்கு ரூ. ரூ.114.68 கோடி ஒதுக்கீடு.
12. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் ஆராய்ச்சி மற்றும் வேளாண் கல்வியை வலுப்படுத்துவதற்கு ரூ. 573.24 கோடி.
13. கோயம்புத்தூரில் உள்ள வளங்குன்றா வேளாண்மைக்கான துறை ‘நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்’ என பெயர் மாற்றம் செய்து, நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கி இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை வலுப்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கீடு .
14. மண் வளத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான உணவை மக்களுக்கு வழங்குவதற்காக இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ரூ.33.03 கோடியில் செயல்படுத்தப்படும்.
15. பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி, பாதுகாத்து, விதை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில், நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம்.
16. வேளாண்மை பட்டதாரிகள் மற்றும் இதர இளைஞர்கள் வேளாண்மை பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.7.68 கோடியில் செயல்படுத்தப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும்.
17. நமது மாநில மரமான பனை மரத்தை நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த, பனை தொடர்பான பல்வேறு தொழில்களை ஊக்குவிக்க, ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டுத் திட்டம். தேவையில்லாமல் பனை மரத்தினை வெட்டும் நடைமுறை நெறிமுறைப்படுத்தப்படும்.
18. நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், தென்னை, பருத்தி, பழங்கள் போன்ற பயிர்களின் சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், உற்பத்தியை உயர்த்தவும் மொத்தமாக ரூ.300.56 கோடி ஒதுக்கீடு.
19. கரும்பு விவசாயிகளின் நலனுக்காக, கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ42.50, கூடுதல் “சிறப்பு ஊக்கத்தொகையாக” டன் ஒன்றுக்கு ரூ.150/- வழங்குவதற்கு ரூ.178.83 கோடி நிதி, கரும்பு உற்பத்திக்கான சிறப்புத்திட்டத்திற்கு ரூ.2 கோடி நிதி
20. வேளாண்மையின் மகத்துவத்தை இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில், சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம்.
21. மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புச்சட்டி, கடப்பாரை, கதிர் அரிவாள் அடங்கிய "வேளாண் உபகரணங்கள் தொகுப்பு" அரை இலட்சம் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ.15 கோடி ஒதுக்கீடு.
22. இயற்கை வேளாண்மை, ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாநில அளவிலான பரிசு.
23. வேளாண் தொடர்பான பல்வேறு முக்கிய பிரச்னைகளை அவ்வப்போது ஆய்வு செய்து, தீர்வு காண மாநில அளவில் தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்நிலைக்குழு.
24. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, எலுமிச்சை, முருங்கை, கறிவேப்பிலை, கற்பூரவல்லி, திப்பிலி, கற்றாழை, புதினா போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகள் அடங்கிய இரண்டு இலட்சம்,
ஊட்டச்சத்துத் தளைகள் வழங்கும் திட்டத்திற்காக ரூ.2.18 கோடி நிதி ஒதுக்கீடு.