சென்னை:பல்கலைக்கழக ஆசிரியர்கள் மட்டுமின்றி அனைத்து கல்லூரி பேராசிரியர்களும் ஒருங்கிணைந்து ஒட்டுமொத்தமாக குரல் கொடுங்கள். இதுவே, எனது அன்பான வேண்டுகோள் என இன்று (பிப்.4) பல்கலைகழக ஆசிரியர் சங்கமான AUT-வின் 75வது ஆண்டு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள உலக பல்கலைகழக உதவி மையத்தில் பல்கலைகழக ஆசிரியர் சங்கமான AUT-வின் 75வது ஆண்டு விழா (75th Anniversary of the University Teachers Association) இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பல்கலைகழக ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, பொதுச்செயலாளர் பாலமுருகன்,ஒருங்கிணைப்பாளர் சேடு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மாநில அரசு ஊழியர்களுக்கு சம ஊதியம்:நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, 'உங்களில் ஒருவனாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே, இந்த சங்கத்தின் வைரவிழா, பொன்விழாக்களில் கலந்துகொண்ட அதை உரிமையுடன் தான் இன்றும் பங்கேற்றுள்ளேன். 1947-ல் இந்த சங்கம் தொடங்கப்பட்டது. 1987-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று போராடியபோது சிறை சென்றேன்.
உயர்கல்வித்துறையில் தமிழ்நாடு முன்னணி:1989-ல் நான் அமைச்சராக பொறுப்பேற்றேன். கருணாநிதி பொறுப்பேற்றப் பின், மத்திய அரசு ஊழியர்கள் ஊதியம் போல், மாநில அரசு ஊழியர்களுக்கும் மாற்றி அமைத்தார். நிதிநிலை சரியாகும் போது, வரும் காலங்களில் உங்களுக்கு தேவையானதை நிறைவேற்ற அரசு முயற்சி செய்யும். இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் உயர்கல்வித்துறை எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எண்ணிக்கையில் மட்டுமல்ல தரத்திலும் உயர வேண்டும். ஆசிரியர்களிடம் அன்பான கோரிக்கையை வைக்கிறேன். நாங்கள் என்னதான் திட்டம் கொண்டு வந்தாலும், அதனை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது உங்கள் கையில்தான் உள்ளது.
இதையும் படிங்க:"இடைத்தேர்தலை இரட்டை இலையில் அதிமுக எதிர்கொள்ள வேண்டும்" - அண்ணாமலை