சென்னை:அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெற்று முடிந்த நிலையில், இதில் காலதாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்த சுமார் 10,000 மாணவர்களுக்கு தேர்வில் ஆப்சென்ட் போடப்பட்டு விடைத்தாள்கள் திருத்தப்படாது என அறிவிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இல்லத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வுகள் நடைபெற்று விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யவும், அசல் விடைத்தாள்களை கொரியர் மூலம் அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அப்போதே மாணவர்களுக்கு விடைத்தாள்களை அனுப்பி வைக்கவும் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
கல்விக்கடன் ரத்து குறித்து அறிவிப்பு
இந்த நிலையில் சில மாணவர்கள் தாமதமாக விடைத்தாள்களை பதிவேற்றம் செய்தனர். அதனால், அந்த மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படாது என வெளியான தகவல் தவறானது. காலதாமதமாக விடைத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தாலும் நிச்சயம் உரிய முறையில் மதிப்பீடு செய்யப்படும். அனைத்து மாணவர்களுக்கும் ஒரே வாரத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். எனவே, மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை.
மேலும் 'கல்விக்கடன் ரத்து' செய்யப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதி, தமிழ்நாடு அரசின் நிதிநிலை சரியானவுடன் அதுகுறித்த அறிவிப்பு நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டிற்கான கல்விக் கொள்கையை வகுப்பதற்கு குழு அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு உயர் கல்வித்துறை சார்பில் ஆராய்ந்து உரிய முடிவு எடுக்கப்படும்.
நடப்பாண்டிலேயே மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்
'அச்சம் வேண்டாம்..அனைத்து மாணவர்களின் விடைத்தாள்களும் திருத்தப்படும்' - அமைச்சர் பொன்முடி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நாளை (மார்ச் 21) முதல் செமஸ்டர் தேர்வுகள் நேரடி முறையில் நடைபெற உள்ளது. இவர்களுக்கு ஏற்கெனவே செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் தேர்வுகளைப் பொறுத்தவரையில் அது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்காது. எனவே, மாணவர்கள் தங்களை நேரடி முறையில் தேர்வு எழுத தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்டம் அமைந்தவுடன் தமிழ்நாட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களின் வேலை வாய்ப்பு நிச்சயம் உயரும். மேலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் தான் 'நான் முதல்வன்' திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.
உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் நடப்புக்கல்வி ஆண்டு முதலே செயல்படுத்தப்படும். இதனால் மாணவிகள் இடைநிற்றல் மேலும் குறையும். தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் ஏற்கெனவே பதிவு செய்தவர்களுக்கே வழங்க முடியாத நிலை உள்ளது. அதனைவிட இந்தத் திட்டம் சிறந்தது. தமிழ் வழியில் பொறியியல் படிப்பதற்கு தேவையான முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு வழங்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போட்டதா அண்ணா பல்கலை?