தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் உண்டியல் திறப்பு விவகாரம்; "மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க அவசியமில்லை" - அறநிலையத் துறை வாதம்! - மெட்ராஸ் ஐகோர்ட்

Live stream before Hundial opening process: விதிகளின்படி கோயில் உண்டியல் திறப்பை நேரடியாக கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால், மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க அவசியம் இல்லை என இந்து சமய அறநிலையத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Live stream before Hundial opening process
கோயில் உண்டியல் திறப்பு விவகாரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 7:32 AM IST

சென்னை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் இல்லாமலும், விதிகளைப் பின்பற்றாமலும் உண்டியல்களை திறக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதேபோல, உண்டியல் திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்கக் கோரியும், உண்டியல்களைத் திறந்து காணிக்கையை எண்ணும்போது கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும், காணிக்கை எண்ணும் பணிக்கு உள்ளூர் மக்களையே பணியமர்த்த வேண்டும் எனக் கோரியும், உண்டியல் எண்ணிக்கையை கண்காணிக்க மாவட்டம்தோறும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அல்லது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுக்களை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்குகளுக்கு பதிலளித்து, அறநிலையத் துறை ஆணையர் முரளிதரன் தாக்கல் செய்த பதில் மனுவில், “5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வசூலாகும் கோயில் உண்டியல்களை மாதந்தோறும் திறக்க வேண்டும். இரு வாரங்களுக்கு முன் சம்பந்தப்பட்டவர்களுக்கு முன் அறிவிப்பு கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் பின்பற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விதிகளின்படி, கோயில் அறங்காவலர் குழுத் தலைவர், செயல் அலுவலர், தக்கார்கள், பொதுமக்கள், வங்கி அதிகாரிகள் முன் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதிலுள்ள பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களின் விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய கோயில்களில் உண்டியல் திறப்பு மற்றும் எண்ணிக்கை, கோயில் யூடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் முதல் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, முக்கிய கோயில்களில் உண்டியல் திறப்பின்போது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதால், மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க அவசியமில்லை" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனுவை மனுதாரருக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2024 ஜனவரி 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மாஜி அமைச்சர் காமராஜுக்கு எதிரான முறைகேடு வழக்கு: அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மேலும் அவகாசம்!

ABOUT THE AUTHOR

...view details