சென்னை:கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் நா.லோகு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில், தமிழகத்தில் உள்ள 12 மின்வாரிய மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட மேற்பார்வை பொறியாளர்,செயல் பொறியாளர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து மின்வாரிய அலுவலகங்களில் ஊழியர்கள் அலுவலர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை.
இதன் காரணமாக அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகின்றது. எனவே மின்வாரிய அலுவலகத்திலும் பணிபுரியும் ஊழியர்களின் வருகையை பதிவு செய்ய, ஆதார் இணைப்புடன் கூடிய பயோமெட்ரிக் கருவியை பொருத்த உத்தரவிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கில் மின் வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,பயோ மெட்ரிக் பதிவேடு முறையை , தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் நிதிநிலை கருத்தில் கொண்டு அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் மின்வாரியத்தில் நிர்வாகம் மற்றும் கணக்குப் பிரிவு, தொழில்நுட்ப பிரிவுகளில், அலுவலகம் சார்ந்த பணிகள் இருப்பதால் மாநில தலைமையகங்களில் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.