தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக அலுவலகத்திலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களை சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க உத்தரவு!

அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

directs
சென்னை

By

Published : May 4, 2023, 8:20 PM IST

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் நடந்தது. அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தன் ஆதரவாளர்களுடன் ராயப்பேட்டை அதிமுக அலுவலகம் சென்றபோது, இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு, அது கலவரமாக மாறியது.

அப்போது, அலுவலகத்தில் இருந்து சொத்து ஆவணங்கள், வாகனங்களின் ஆர்.சி புத்தகங்கள், கம்ப்யூட்டர் உள்பட பல பொருட்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எடுத்துச்சென்று விட்டதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல்துறையில் புகார் அளித்தார்.

கலவரம் தொடர்பான வழக்கு பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட பொருட்களை காவல்துறையிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஒப்படைத்தனர். அந்தப் பொருட்கள் எல்லாம் தற்போது சென்னை சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்தப் பொருட்களை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சி.வி. சண்முகம், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், "ஜூலை 11ஆம் தேதி நடந்த கலவரத்தைத் தொடர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்து சாவியை எடுத்துச்சென்று விட்டனர். அதை திரும்பக்கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை கொடுக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. எனவே, அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை எங்களிடம் வழங்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வைத்திலிங்கம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான பிரதான வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்படாததால், இந்த பொருட்களுக்கு யார் உரிமையாளர் என்று தற்போது முடிவு செய்ய முடியாது - அதனால், இருவரது மனுக்களும் நிலைக்கத்தக்கது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சி.வி.சண்முகம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. இன்று(மே.4) இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமையாக கருத்தில் கொள்ளாமல் சைதாப்பேட்டை நீதிமன்றம் தங்கள் தரப்பிற்கு ஆவணங்கள் மற்றும் பொருள்களை வழங்க மறுத்துள்ளதாக வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அதிமுக அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆவணங்கள், பொருட்களை அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகத்திடம் வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பிடிஆர் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து ஸ்டாலின் மௌனம் காப்பது ஏன்?... சிவி சண்முகம் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details