சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்குவதற்காக கல்லூரிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் உதவி மற்றும் தகவல் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் மூலம் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பம் செய்வது முதல் , கல்லூரியில் சேர்வது வரையிலும் தேவையான தகவல்களை பெற முடியும். மேலும் மாணவர்களுக்கு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களிலும் உதவி மற்றும் தகவல் சேகரிப்பு மையத்தின் எண்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குனர் அலுவகத்தில் புதியதாக உதவி மற்றும் தகவல் மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த மையத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர உள்ளவர்கள் தொடர்புக் கொண்டு தகவல்களை தெரிந்துக் கொள்வதற்கு வசதியாக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-24ம் கல்வியாண்டில் மாணவர்கள் தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 8 ந் தேதி காலை முதல் துவங்கியது. இதில் 19 ந் தேதி வரையில் பதிவு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2 ம் சேர்த்து ரூ.50 செலுத்த வேண்டும். கலை மற்றும் அறிவியியல் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் 1 லட்சத்து 73 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணபித்துள்ளனர்.