இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ”அடுத்த 48 மணி நேரத்தில் தருமபுரி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், சேலம், திருச்சி, மதுரை, நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வளிமண்டலத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
”ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை தென் மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்தக் காற்றுவீசக்கூடும். ஆகஸ்ட் 29 முதல் 31ஆம் தேதி வரை வடகிழக்குப் பகுதிகளிலும், குஜராத் கடலோரப் பகுதிகளிலும் சூறாவளிக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்ட் 29, 30 ஆகிய தேதிகளில் வடக்கு மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.