சென்னை:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக் காலத்தையொட்டி, கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில், சென்னை மாநகர் பகுதிகளை விட புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று காலை வரை) தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. மேலும், வரும் நாட்களிலும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தென்காசி, ஆய்க்குடி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 11 செ.மீ முதல் 12 செ.மீ வரை மழை பதிவாகி உள்ளது. மேலும், கடந்த 6 நாட்களில் (நவ 1 முதல் 6 வரை), தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 60 மீ.மீ மழை பதிவாகி உள்ளது. மேலும், அக்டோபர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை 158 மீ.மீ மழை பதிவாகி உள்ளது.
இயல்பாக அக்டோபர் 1 முதல் நவம்பர் 6 வரையிலான காலகட்டத்தில், 220.1 மீமீ அளவு மழை பதிவாகும். ஆனால், தற்போது வரை பெய்த மழை அளவு இயல்பை விட 28 சதவீதம் குறைவாகப் பதிவாகி உள்ளது. மேலும், இன்றைய தேதியில் சராசரியாக 9.3 மீமீ அளவு பெய்து இருக்க வேண்டும். ஆனால் 4.4 மீமீ அளவில் மழை பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.