சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், “எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி சில சம்பவங்களைப் பட்டியலிட்டு கூறுகிறார். ஆனால் அந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறார். சம்பவம் நடந்த உடன் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறது திமுக ஆட்சி.
ஸ்டெர்லைட் விவகாரம் நடக்கும் பொழுது தொலைக்காட்சியைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னது போல் இல்லை எங்கள் ஆட்சி. அதிமுக ஆட்சியில் கல்லால் அடித்தே எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கொல்லப்பட்டதாகவும் கூறினார். மேலும், திமுக ஆட்சியில் எங்கெங்கெல்லாம் சம்பவம் நடக்கிறதோ அது ஆளும் கட்சியாக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து கைது செய்யப்பட்டுள்ளது. அதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது. அதையெல்லாம் நாளை பதில் உரையில் விளக்கமாக தெரிவிக்க இருக்கிறேன்” என்றார்.
அதற்குப் பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “நான் தொலைக்காட்சியில் பார்த்து தான் ஸ்டெர்லைட் விவகாரம் தெரிந்து கொண்டேன் என்று முதல்வர் சொன்னது உண்மைதான். நான் அன்று ஆய்வுக் கூட்டத்தில் இருந்தேன். அதனால் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று கூறினேன்.
அதன்பின்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை அங்கு எங்களின் அரசு செய்தது என்றார். தொடர்ந்து அங்கு ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று போராட்டம் நடைபெற்றது. முழுமையாக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றார். மேலும், 144 தடை உத்தரவு போடப்பட்ட பிறகும் சட்டமன்ற உறுப்பினர் எப்படி போராட்டம் நடத்தினார் என குற்றம் சாட்டினார்.
அதற்குப் பதில் அளித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், “உண்மைக்கு புறம்பான செய்தியை கூறுகிறார்கள். 100 நாளுக்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது. ஆட்சியில் இருந்தவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் மக்களோடு இருக்கும்பொழுது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டேன். அந்த சம்பவம் நடைபெற்றதற்கு அப்போது ஆட்சியில் இருந்தவர்களின் நிர்வாக சீர்கேடு தான் காரணம் எனவும் சம்பவம் நடைபெற்ற போது ஆட்சி தலைவர் ஊரில் இல்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய துரைமுருகன், “தடை உத்தரவு போட்ட பிறகு எப்படி போராடலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்கிறார். தடை உத்தரவு போட்ட இடத்திற்குச் செல்லவில்லை. அப்படியே இருந்தாலும் சரி அதற்காக வண்டிக்கு மேல் நின்று சுடுவதா? காக்கா குருவிகளைச் சுடுவது போல் வேன் மேல் ஏறி அன்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகக் கூறினார். மேலும், 100 நாள் போராட்டம் நடத்தி மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து மனு கொடுப்பதற்காக வருகிறார்கள் அந்த நேரத்தில் ஆட்சித் தலைவர் ஊரில் இருந்து இருக்க வேண்டும். இந்த போராட்டம் வெடிப்பதற்கு உங்கள் ஆட்சித் தலைவரும் ஒரு காரணம் எனக் கூறினார்.
பிறகு பேசிய பழனிசாமி, “திமுக ஆட்சியில் எத்தனை துப்பாக்கிச் சூடு நடந்தது என்று நான் தெரிவிக்கவா, திமுக ஆட்சியில் அன்று நடந்ததை நாங்கள் ஆதாரத்தோடு தெரிவிக்கிறோம் என்றார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “நூறு நாட்களுக்கு மேல் அந்த போராட்டம் நடந்து கொண்டிருந்தது ஏன்? முதலமைச்சர், அமைச்சர் போராட்டக்காரர்களை அழைத்துப் பேசவில்லை. அதன் பிறகு தான் நூறாவது நாள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்திப்பதற்காக போராட்டக்காரர்கள் சென்றார்கள்.