சென்னை பாரிமுனையில் உள்ள பேருந்து நிலையத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிப்பதை நேரடியாகச் சென்று சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
மேலும், அவர்களுக்கு முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதுமட்டுமின்றி, பேருந்து நிலையத்தில் முகக்கவசம் இல்லாமல் சுற்றிய நபர்களுக்கு, நடமாடும் வாகனத்தின் மூலம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு நாள்தோறும் 30 ஆயிரம் என்ற அளவில் இருக்கிறது. சென்னையில் பரிசோதனை செய்தால் இரண்டு விழுக்காடு நபர்களுக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரடியாக ஆய்வு சென்னையில் கடந்த மூன்று நாள்களில் 38 ஆயிரத்து 372 நபர்களிடம் 83 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. 69 அரசு பரிசோதனை மையங்கள் உள்பட 259 மையங்களில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
சென்னையில் பொதுமக்களைக் கண்டறிந்து சம வாய்ப்பாகப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதியில் உள்ளவர்களுக்குத் தொற்று உள்ளதா? என்பதைக் கண்டறிய முடியும்.
சென்னையில் ஒரே நிறுவனத்தில் மூன்று இடங்களில் பணியாற்றியவர்களில் 40 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தரமணி, பெருங்குடி, கந்தன்சாவடி ஆகிய இடங்களில் இயங்கிவந்த நிறுவனத்திலிருந்து கண்டறியப்பட்டுள்ளன. இந்நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 364 ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தியாகராய நகர், மயிலாப்பூர், மடிப்பாக்கத்தில் கரோனா பரவல் தீவிரம் அதிகரித்துள்ளது. நோய் இருக்கும் பகுதியில் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. பரிசோதனை எண்ணிக்கையை 50 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரமாக உயர்த்தியுள்ளோம்.
பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைக்கழுவுதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இந்த விதிமுறைகள் அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். மேலும் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை அரசியல் கட்சியினர் பின்பற்றுகின்றனரா? என்பதையும் கண்காணிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, கல்லூரிகளில் கரோனா பரவுகிறதா? என்பது குறித்து உயர் கல்வித் துறை செயலாளர் அபூர்வா பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோவிஷீல்டு: 2ஆவது டோஸ் போட்டுக்கொள்வதற்கான கால அளவு நீட்டிப்பு!