தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அரசு மருத்துவமனைகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்" - ககன்தீப் சிங் பேடி! - ககன்தீப் சிங் பேடி கடிதம்

மருத்துவமனைகளில் வார்டுகள், கழிப்பறைகள், சமையல் கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சுகாதாரமான முறையில் வைத்திருக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 7:16 AM IST

சென்னை:மருத்துவமனைகளில் வார்டுகள், கழிப்பறைகள், சமையல் கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சுகாதாரமான முறையில் வைத்து இருக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் பணியில் தனியார் நிறுவனம் மூலம் அவுட்சோர்சிங் முறையில் அதிக அளவில் ஆட்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். .

ஆனால் போதுமான அளவில் பணியாளர்கள் இல்லாமல் மருத்துவமனைகள் சுத்தமாக இல்லை என புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நேரடியாக ஆய்வு செய்தார். மேலும் அவுட்சோர்சிங் முறையில் நியமனம் செய்யப்படும் பணியாளர்கள் சரியான முறையில் மருத்துவமனையை தூய்மையாக பராமரிக்கவில்லை என்பதும் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு சுத்தமான முறையில் தரமான சேவை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவமனை முதல்வர்களுக்கும் மருத்துவ கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளையும் சுத்தமான சுகாதாரமான மருத்துவமனையாக மாற்ற, சுத்தமான மருத்துவமனை பிரச்சாரம் என்ற புதிய அறிவுறுத்தலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மருத்துவமனையின் தூய்மை மட்டுமல்லாமல், நோயாளிகளின் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். எனவே மருத்துவமனையையும், நோயாளிகளின் அடிப்படை தேவைகளை சரியாக வழங்க வேண்டும்.

சுத்தமான படுக்கைகள் உறுதி செய்தல்:மருத்துவமனையில் அனைத்து வார்டுகளிலும் உள்ள படுக்கைகள் கொண்ட கட்டில்களும் ஒரே வண்ணத்தில், ஒரே வடிவத்தில் சுத்தமாகவும், சேதமடையாத வகையிலும் இருக்க வேண்டும். சுத்தமான படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளுடன், ஒரே வரிசையில் நன்கு அமைத்திருக்க வேண்டும். வார்டுகளுக்கு வழங்கப்படும் படுக்கை விரிப்புகள், தலையணைகள் படுக்கைகளின் எண்ணிக்கையை விட குறைந்தது மூன்று மடங்கு இருக்க வேண்டும்.

சில மருத்துவமனைகளில் பெட்சீட்கள் மற்றும் தலையணைகள் தினசரி மாற்றப்படுவதை உறுதி செய்வதற்காக குறிப்பிட்ட நாட்களில் பல்வேறு வண்ணத் துணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு நல்ல நடைமுறையாகும். இது நிதி இருப்பின் அடிப்படையில் மீண்டும் தொடர்ந்து செயல்படுத்தலாம்.

பெட்சீட் மற்றும் தலையணைகளின் உறைகள் தினமும் தவறாமல் துவைக்க வேண்டும். இதனை உரிய பணியாளர்கள் தினமும் செய்திட வேண்டும். அவற்றை தலைமை செவிலியர்கள் கண்காணிக்க வேண்டும்.

சுத்தமான வார்டுகளை உறுதி செய்ய அறிவுறுத்தல்:அனைத்து வார்டுகளிலும் உள்ள கழிப்பறைகளையும் 24 மணி நேரமும் பணியாளர்கள் மற்றும் அவுட்சோர்சிங் ஏஜென்சிகள் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதற்கு தேவையான இயந்திரங்கள், துப்புரவு கிருமிநாசினிகள் போன்றவை போதுமான அளவு கையிருப்பு வைத்திருக்க வேண்டும். வார்டு பணியாளர்கள், செவிலியர்கள் மேற்கண்ட விதிகளை அமல்படுத்தி, கழிவறைகளை ஆய்வு செய்ய வேண்டும்.

சுத்தம் செய்த பிறகு பதிவுதாளில் பதிவு செய்ய வேண்டும். சுத்தம் செய்யாமல் அல்லது பதிவு செய்யாமல் இருந்தால், ஏதேனும் புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் முறையாக பராமரிக்கும் பணியாளர்கள் மற்றும் செவிலியர்களை பாராட்ட வேண்டும். நிலைய கண்காணிப்பு அதிகாரிகள் அவ்வப்போது திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

அதனைத் தொடர்ந்து ஒப்பந்த பணியாளர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருகிறார்களா?, வருகை பதிவேட்டில் சரியாக கையெழுத்திடுகிறார்களா என்பதை நிலைய மருத்துவ அதிகாரி கண்காணிக்க வேண்டும். உரிய நேரத்தில் வராத பணியாளர்கள் மீது மருத்துவமனை கண்காணிப்பாளர்கள், முதல்வர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பராமரிப்பு பணியாளர்களின் சேவையை உறுதி செய்தல்:ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட வார்டு பணியாளர்கள், செக்யூரிட்டிகள் ஆகியோர்களின் முழு விவரம் மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் முதல்வர்களும் அறிந்திருக்க வேண்டும். அவர்களது வருகை பதிவேட்டினை தினமும் சரிபார்க்க வேண்டும். வார்டுகள், லாபிகள், படிக்கட்டுகள், அறைகள், OP அறைகள், பொதுவான இடங்கள், கழிப்பறைகள் போன்றவற்றின் தூய்மையை உறுதி செய்ய வேண்டும்.

நோயாளிகளுக்கு தரமான உணவை உறுதிப்படுத்துதல்:வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு சுகாதாரமான, சுவையான உணவு அங்கீகரிக்கப்பட்ட அளவில் சரியான நேரத்தில் வழங்கப்படுவதை சமையலறையின் பொறுப்பான உணவியல் நிபுணர் அல்லது செவிலியர் உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட வார்டு ஊழியர்கள், மருத்துவமனைகளைச் சுற்றி இருக்கும் சுகாதாரமில்லாத மற்றும் பாதுகாப்பற்ற ஹோட்டல் உணவுக்குப் பதிலாக மருத்துவமனை உணவை உட்கொள்ள நோயாளிகளை ஊக்குவிக்க வேண்டும்.

மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவமனை முதல்வர் ஆய்வுக்கு செல்லும் போது, நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட உணவு மற்றும் சரியான நேரத்தில் வழங்கப்பட்டதா என்பதை நோயாளிகளிடம் கேட்டறிய வேண்டும். நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கும் கூடம் சுத்தமாகவும், போதுமான தரம் வாய்ந்த உணவுப்பொருட்களை போதுமான அளவு இருப்பு வைக்கப்படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

சமையல் அறை ஊழியர்களுக்கு கட்டாயமாகத் தவறாமல் சுகாதாரப் பரிசோதனை அவ்வப்போது செய்ய வேண்டும். அதனை உறுதி செய்ய சமையலறை மற்றும் வார்டுகளின் ஆய்வுகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பராமரிப்பை உறுதி செய்தல்:மருத்துவமனையின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனையில் உள்ள கழிப்பறைகள் மற்றும் மற்ற இடங்களில் தண்ணீர் வசதி முறையாக வழங்கப்படுகிறதா? அதற்கான பைப்புகள் சேதமடையாமல் உள்ளதா, குழாய்கள், வடிகால்வாய் அமைப்புகள், கழிவுநீர் அமைப்புகள், தரையையும் உறுதி செய்ய வேண்டும்.

வார்டுகளிலும், பொதுவான வரண்டாக்களிலும் உள்ள மின்விசிறிகள், விளக்குகள், லிப்ட்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் பிற மின் சாதனங்கள் செயல்படுகிறதா என்று ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும். சுத்தமான மருத்துவமனை என்ற திட்டம் முழுமையாக செயல்படுத்த வேண்டியது மருத்துவமனையின் இயக்குநர்கள், மருத்துவ கண்காணிப்பாளர்கள், மருத்துவமனையின் முதல்வர்கள் தான் எனவும், மருத்துவமனை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருப்பதன் மூலம் மக்களுக்கு சிறந்த சேவை வழங்குவது உறுதியளிக்கப்படுவதோடு, மக்களின் நன்மதிப்பையுப் பெரும் வாய்ப்பு உள்ளது" என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:'தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் பாடத்திட்டத்தை பின்பற்றாதீர்கள்' - ஆளுநர் ரவி அதிரடி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details