சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியின் மறுசீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்காக மறுசீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 55 ஆயிரத்து 52 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். மருத்துவமனையில், 2 ஆயிரத்து 200 படுக்கைகள் உள்ளது. தற்போது 115 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருப்பு பூஞ்சை பாதிப்பு
கருப்பு பூஞ்சை நோயால் தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் 778 பேர் பாதிக்கப்பட்டு அதில் 216 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 456 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிதாக பதவியேற்றுள்ள ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் அனுமதியளித்தால் இன்று (ஜூலை 08) மாலை டெல்லி பயணம் மேற்கொள்வேன்.