சென்னை: தேனாம்பேட்டை தமிழ்நாடு சுகாதார திட்ட அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 2024-25ஆம் ஆண்டிற்கான காப்பீட்டுத் தொகை 1228.27 கோடி ரூபாய்க்கான காசோலையை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீடு திட்டத்திற்கான 11.1.2024 தொடங்கி 10.1.2025 வரைக்கான பிரிமியத் தொகை 1228.27 கோடி ரூபாய்க்கான காசோலை இன்று (ஜன.10) யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சராகக் கருணாநிதி இருந்த காலகட்டத்தில் 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.
ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது: 14 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டதால், இந்தியாவிற்கே முன்மாதிரியாக இத்திட்டம் செயலாக்கத்திற்கு வந்தது. தமிழ்நாட்டில் இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 1.45 கோடி குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இவர்களுக்கு ஆண்டொன்றிற்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் 2 லட்சம் ரூபாயாக இருந்தது, தற்போது 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
1,513 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள்:அனைத்து பயனாளர்களும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது ஆண்டு வருமானம் 1 இலட்சத்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. 854 அரசு மருத்துவமனைகள், 975 தனியார் மருத்துவமனைகள் என ஆயிரத்து 829 மருத்துவமனைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமே மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகமான நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆயிரத்து 513 மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் காப்பீட்டுத் திட்டப் பயன்பாட்டில் இருக்கின்றன.
காப்பீடு சிறப்பு முகாம்கள்:8 சிறப்பு உயர் சிகிச்சை முறைகள், 52 முழுமையான பரிசோதனை முறைகள், 11 தொடர் சிகிச்சை முறைகள் என்று அனைத்து சிகிச்சைகளும் உள்ளன. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, காது வால் நரம்பு உள் வைப்பு அறுவை சிகிச்சை, ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மற்றும் இருதய மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் வால்வு மாற்று அறுவை சிகிச்சை, செவிப்புல மூளை தண்டு அறுவை சிகிச்சை என 8 உயர் சிகிச்சை மற்றும் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தமிழ்நாட்டில் செய்யப்படுகிறது.
காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் 22 லட்சம் ரூபாய் வரை பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் கடந்த ஆட்சிக்காலத்தில் பிரிமியத் தொகை 699 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 849 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் காப்புறுதித் தொகை 2 லட்ச ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 2021ம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி இந்த ஆட்சி பொறுப்பேற்றவுடன் இக்காப்பீட்டுத் திட்டத்தில் மேலும் பல குடும்பங்கள் இணைத்திட வேண்டும் என்கின்ற நோக்கில் காப்பீடு சிறப்பு முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
10,12,030 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்:தமிழ்நாட்டில் 100 சட்டமன்றத் தொகுதிகளில் 100 முகாம்கள் நடத்தப்பட்டதில், இதுவரை 8 இலட்சத்து 84 ஆயிரத்து 551 புதிய குடும்பங்கள் இக்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இன்னமும் கூட 100 தொகுதிகளில் 100 முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேதி இறுதி செய்து விரைவில் அறிவிக்கப்படும். இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் இதுவரை தமிழ்நாட்டில் 2 இலட்சத்து 9 ஆயிரத்து 39 பேர் பயன்பெற்றுள்ளனர்.
இதற்காக 182.09 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த 11.1.2022 முதல் 10.1.2023 வரை 10 இலட்சத்து 12 ஆயிரத்து 30 பயனாளிகள் 1329.31 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையில் பயனடைந்து உள்ளனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:“தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தோல்வி” - அமைச்சர் துரைமுருகன்!