சென்னை:தேனாம்பேட்டையில் தேசிய நல்வாழ்வு இயக்குனர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “தமிழ்நாட்டில் புதிய புரட்சிகர திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை (ஆகஸ்ட் 5ஆம் தேதி) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் 36 லட்சத்து 31 ஆயிரத்து 843 பேர் இதுவரை பயன்பெற்றுள்ளனர். நீரழிவு, இரத்த அழுத்தம், டயாலிசிஸ், பிசியோதரபி எனச் சிகிச்சை அளித்து மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
இந்த மகத்தான திட்டம் என்பது மக்களிடம் வலுப்பெற்றுச் சென்று கொண்டிருக்கிறது. இந்த திட்டத்திற்காகச் செவிலியர்கள், சுகாதார அலுவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 4 ஆயிரத்து 858 செவிலியர்கள், 2 ஆயிரத்து 448 சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 296 பேர் விரைவில் நியமிக்கப்பட்ட உள்ளனர்.
இதில் ஏற்கனவே கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஒப்பந்தப்பணியில் 12 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட்டனர், மேலும்,4 ஆயிரத்து 570 செவிலியர்கள், 1646 சுகாதார ஆய்வாளர்கள் உள்ளனர். இவர்களின் பணிக்காலம் டிசம்பர் இறுதி வரை உள்ளது.
மனிதாபிமானத்தின் அடிப்படையில்..
கரோனா காலத்தில் பணியாற்றியவர்களை நேரடியாக பணியமர்த்தல் சாத்தியமில்லா ஒன்று. இருப்பினும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவர்களுக்கும் வாய்ப்பினை வழங்க 4 ஆயிரத்து 570 செவிலியர்கள், 1,646 சுகாதார ஆய்வாளர்கள் கரோனா காலத்தில் பணியாற்றிய காரணத்தால் அவர்களுக்கு 20 மதிப்பெண் தரப்படவுள்ளது. மேலும், படிப்பு, பணியாற்றியதன் அடிப்படையில் மதிப்பெண், இருப்பிடத்தின் அடிப்படையில் மதிப்பெண் போன்றவையும் வழங்கப்பட உள்ளன.
இடைத்தரகர்களை நம்பவேண்டாம்
செவிலியர் பணியில் நிறைய பேர் நாகர்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். அவர்கள் பணியில் சேர்ந்த பின்னர் தங்களின் சொந்த மாவட்டத்திற்குச் செல்ல வேண்டும் எனக் கூறுகின்றனர்.
ஆகையால் இருப்பிடத்திற்கு மதிப்பெண் அளிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் ஒரே இடத்திற்கு அனுப்ப இயலாது. இந்த பணியிடங்களில் நியமனம் செய்வதற்கு இடைத்தரகர்களை நம்பவேண்டாம். வெளிப்படைத் தன்மையோடு அரசு செயல்படுகிறது. புதிய பணியிடம் நிரப்பும் போது உண்மை நிலை நேர்மையாக நிரப்பப்படும்.
20 மதிப்பெண் வழங்கப்படும்
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலுள்ள மாவட்ட சுகாதார சங்கத்தின் முன் சென்று பார்த்தால் போதும் உங்களுக்குத் தகுதி இருந்தால், அவர்கள் உங்களை பணியமர்த்துவார்கள். தற்பொழுது பணியாற்றி வருபவர்களுக்கு 20 மதிப்பெண் வழங்கப்படுகிறது. அவர்களும் இத்தகவலை அறிந்து அந்தந்த மாவட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
தேசிய சுகாதாரத்திட்டத்தின் மூலம் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் ஊதியம் 14 ஆயிரம் என்பதை அதிகரித்து 18 ஆயிரமாக வழங்கப்படும். மேலும், இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள்.
கரோனா தொற்று காலத்தில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் தற்பொழுது தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால், அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய முடியாது. ஏற்கனவே பணியில் உள்ள செவிலியர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 'நம்மைக் காக்கும் 48' என்ற திட்டம் மருத்துவத்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத் துறையை உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து முதலமைச்சர் அறிவித்தார். முதலமைச்சர் இந்தத் திட்டத்தை டிசம்பரில் தொடங்கிவைக்கிறார்.
இதற்காக 609 மருத்துவமனைகளில் 204 நெடுஞ்சாலைகள் ஒட்டியுள்ள அரசு மருத்துவமனைகளும், 405 தனியார் மருத்துவமனைகளும் கண்டறியப்பட்டுள்ளது. எந்த நாட்டை சார்ந்தவர்களாக இருந்தாலும் எந்த மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக 1 லட்சம் ரூபாய் அரசு வழங்க உள்ளது. விபத்தினால் காயமுற்றவரைக் காக்கும் சிகிச்சைக்கு வழங்கப்படும். மேலும், தற்பொழுது அதிநவீன வசதிகளுடன் கூடிய 124 ஆம்புலன்ஸ்கள் உள்ளது. இதுவும் 300 ஆக உயர்த்தப்படவுள்ளது.
மனிதம் காக்கும்
தமிழ்நாட்டில் வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அவசரக்கால மருத்துவச்சேவை திட்டம் இயற்றப்படவுள்ளது. இது சாதி, மத, இன, மொழி வேறு பாடு கடந்து மனிதம் காக்கும்.
உருமாறிய கரோனா - போட்ஸ்வானா
ஹாங்காங், தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய போட்ஸ்வானா கரோனா கண்டறியப்பட்டுள்ளது. விமானநிலையங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதற்குத் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். எந்தெந்த நாடுகளில் வரும் பயணிகளை எவ்வாறு பரிசோதனை செய்யவேண்டும் என அலுவலர்களுக்கு கூறியுள்ளோம்.
மருந்தாளுநர்கள் நியமனம்
மருந்தாளுநர்களை நியமனம் செய்வதில் நீதிமன்றத்தில் வழங்கு உள்ளது. வரும் வாரத்தில் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு சம்மந்தப்பட்ட சங்களை அழைத்துப் பேசவுள்ளோம். அவர்கள் வழக்கை வாபஸ் பெற்ற உடன் நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுங்கச்சாவடி அருகில் ஆம்புலன்ஸ்கள் இருக்கவேண்டும். ஆனால், இல்லை என்கிற அடிப்படையில் தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது நேரிலும் வலியுறுத்தப்படும்.
இதனையடுத்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் இராதாகிருஷ்ணன், "விமான நிலையங்களில் யார் வந்ததாலும் கரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம் எனச் சொல்லியுள்ளோம். அதே வேளையில் ஹாங்ஹாங், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இங்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க:Covid 19 new variant: உலக நாடுகளை மிரட்டும் புதுவகை கரோனா; இந்தியாவிலும் உஷார்நிலை