சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் குடலிறக்க அறுவை சிகிச்சை பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், "குடலிறக்க நோய் என்பது பெரியளவில் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு 20 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் 60 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.
கடந்த காலங்களில் குடலிறக்க நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யும்போது வயிற்றை கிழித்து அறுவை சிகிச்சை செய்யும்போது அதனுடைய தழும்பு மண்ணுக்கு செல்லும்வரை இருக்கும். ஆனால் தற்போது நவீன முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசி
சென்னை அப்போலோ மருத்துவமனையில் 5 லட்சம் அளவுக்கு கோவாக்சின் தடுப்பூசி உள்ளது. அதை அரசு பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவித்திருக்கின்றனர். தற்போது கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அதிகளவில் வந்துகொண்டுள்ளன.
ஆனால் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே அப்போலோ மருத்துவமனையில் உள்ள 5 லட்சம் தடுப்பூசிகளை இரண்டாவது தவணை கோவாக்சின் தேவைப்படுபவர்களுக்கு செலுத்த திட்டமிட்டுள்ளோம்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் இரண்டிலும் சேர்த்து 2,74,97,400 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மொத்தமாக 6 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். இதற்காக 12 கோடி தடுப்பூசி தேவைப்படுகிறது. விரைவில் 3 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது என்ற நிலையை எட்டுவோம்.