சென்னை: பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்காத வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது.
இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், "நேற்று தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்பு அரசு பொது தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 2023 ஆம் ஆண்டு 8,03,385 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். அதில் 7,55,451 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது 2023 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத 47,934 மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இவர்களுக்கான மனநல ஆலோசனைகள் சென்னை, DMS வளாகத்திலுள்ள 104 உதவி மையத்திலிருந்து 20 மனநல ஆலோசகர்கள், முதலமைச்சரின் 1100 உதவி மையத்திலிருந்து 60 ஆலோசகர்கள் மற்றும் டெலிமனாஸ் 14416ல் இருந்து 20 ஆலோசகர்கள் கொண்டு இம்மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இம்மாணவர்களை மனநல மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.