சென்னை: பணம் கொடுத்தால் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பதவி உயர்வு வாங்கித் தருவதாக இரண்டு பேர் பேசிக்கொள்ளும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த ஆடியோவில், 109 பேருக்கு பதவி உயர்வுக்கு ஒரே ஆணை என்பதாகவும், ஒவ்வொருவரும் மூன்று லட்சம் ரூபாயை கொடுத்துவிட்டு தனித்தனியாக பதவி உயர்வு ஆணையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அன்பழகன் என்பவர் நீலமேகம் என்பவரிடம் பேசுவதாக அமைந்திருக்கிறது. மேலும், அந்த ஆடியோவில், உடனடியாக பணத்தை கொடுத்து ஆணையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் இல்லையென்றால் வேறு நபர்களுக்கு அந்த பதவி உயர்வு ஆணையை கொடுத்துவிடுவோம் என்றும் பேசப்பட்டுள்ளது.
மக்கள் நல்வாழ்வுத்துறையில் பதவி உயர்வுக்கு பணம்; ஆடியோ வெளியானதால் பரபரப்பு இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கூறும்போது, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் லேப் டெக்னீசியன்கள் பதவி உயர்வில் ஊழல் முறை கேடு நடைபெறுவதாக ஆடியோ வெளியாகி உள்ளது. பதவி உயர்வு விஷயத்தில் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிக்க வேண்டும். ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர் இந்த ஆடியோ குறித்து கூறுகையில், மருத்துவக் கல்வித்துறையில் இது போன்ற நபர்கள் பணிபுரியவில்லை. எந்தத்துறையில் பணிபுரிகின்றனர் என்பதை பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க:’முட்டாள், தொலைத்து விடுவேன்’ : மருத்துவப் பணிகள் இணை இயக்குநரை மிரட்டிய மருத்துவர் - வைரல் ஆடியோ!