சென்னை:உடல் சார்ந்த பல பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வாக இருக்கும் இந்த பீர்க்கங்காயை வாரத்தில் இருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆயிரக்கணக்கில் செலவு செய்து மருந்து வாங்குவதையும் , அறுவை சிகிச்சை செய்வதையும் தடுக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்.
பீர்க்கங்காய் வெள்ளரி குடும்பத்தைச் சார்ந்தவை. வெள்ளரியைப் போலவே இதிலும் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடையைக் குறைப்பதில் இதன் பங்கு அதிகமாக உள்ளது. காய்கறி சந்தைகளில் மலிவான விலையில் குவிந்து கிடைக்கும் இந்த பீர்க்கங்காயில் இவ்வளவு நன்மைகள் இருப்பது தெரிந்தால் வியப்பாக இருக்கும். இதில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் - C போன்ற பல சத்துக்கள் நிறைந்து இருக்கிறது.
பீர்க்கங்காயில் உள்ள நன்மைகள்:
- உடல் எடை குறைப்பு:இனிப்பு சுவையுடைய பீர்க்கங்காயில் குறைந்த கலோரிகள் காணப்படுகிறது. எளிதில் ஜீரணமாகக்கூடிய பீர்க்கங்காய் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியவை. இதில் மிகக் குறைந்த அளவிலான கொழுப்புச் சத்து இருப்பதால் இவை உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்குச் சிறந்த உணவாக இருக்கிறது. பீர்க்கங்காய் சேர்த்த உணவுகளை உண்ணும்போது நீண்ட நேரத்துக்குப் பசி எடுப்பதில்லை.
- நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:உங்களில் சிலருக்கு ஒரு மாதத்தில் அடிக்கடி சளிக் காய்ச்சல் ஏற்படும் அளவுக்கு உடல் பலவீனமாக இருக்கும், சிலருக்கு அதிகமாக அலர்ஜி ஏற்படும். கண், கல்லீரல், வயிறு சிறுநீரக நோய்த்தொற்றுகளுக்கு முக்கிய காரணம் இந்த குறைந்த நோய் எதிர்ப்புச் சக்தி தான். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால் வரக்கூடிய இந்த தொல்லைகளைப் பீர்க்கங்காய் சரி செய்கிறது. இதில் உள்ள வைட்டமின் C, மெக்னீசியம், போன்ற சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றன.
- இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது:காய்கறிகள் அனைத்திலும் கொழுப்பு சத்து என்பது மிகக் குறைந்த அளவிலாவது இருக்கும். ஆனால் பீர்க்கங்காயில் கொழுப்புச் சத்தே கிடையாது என்பதால் இதயத்தைப் பாதுகாப்பதில் முதன்மையாக இருக்கிறது. உடல் செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் அவை நம்மைப் பாதுகாக்கின்றன. அதனால் இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பீர்க்கங்காயைக் கவலையின்றி தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.