சென்னை:பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றி மூலமாக, பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வளர்ந்து வருகிறார். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், தமிழில் ‘எல்ஜிஎம்’ எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படம் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படமாகும்.
அதனைத்தொடர்ந்து, அவரது அடுத்தப் படமான ‘பார்க்கிங்’ அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. பார்க்கிங் திரைப்படம் வெளியாவதற்கு முன்பான ப்ரீ-ரிலீஸ் பிசினஸ் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க:”ட்ராவல் பண்ணுங்க” ரசிகர்களுக்கு ராஷ்மிகா மந்தனா அட்வைஸ்!
மேலும், ’பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய, ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். சரியான திட்டமிடல் மற்றும் அதை செய்லபடுத்துவதன் மூலமாக முழு படப்பிடிப்பையும் குறுகிய காலத்தில் படக்குழு முடித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து, ‘பார்க்கிங்’ படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். சிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் (எடிட்டிங்), என்.கே.ராகுல் (கலை), டி.முருகேசன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), தினேஷ் காசி, ஃபீனிக்ஸ் பிரபு (ஆக்ஷன்), ஷேர் அலி (ஆடைகள்), அப்சர் (நடன இயக்குநர்), யுகபாரதி (பாடல் வரிகள்), டிடிஎம் (விஎஃப்எக்ஸ்), ராஜகிருஷ்ணன் எம்.ஆர். (ஒலிக்கலவை), சிங்க் சினிமா (ஒலி வடிவமைப்பு), யெல்லோடூத்ஸ் (வடிவமைப்பு), ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.
இந்நிலையில், த்ரில்லர் டிராமா ஜானரில் எடுக்கப்பட்டுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கே.எஸ்.சினிஷ் ஆகியோர் தயாரித்துள்ள இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:"வெளிப்புறப் படப்பிடிப்பில் போலீசார் லஞ்சம் கேட்கிறாங்க" - தயாரிப்பாளர் கே.ராஜன் குற்றச்சாட்டு!