தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலாஷேத்ரா விவகாரம்: ஹரி பத்மனின் ஜாமீன் மனு தள்ளுபடி! - kalakshetra sexual harassment issue

கலா‌ஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர் ஹரி பத்மனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 11, 2023, 10:21 PM IST

Updated : Jun 11, 2023, 10:46 AM IST

சென்னை:மத்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் திருவான்மியூர் கலா‌ஷேத்ரா நடனக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, பேராசிரியர் ஹரி பத்மன் மீது மாணவிகள் அடையார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ஹரி பத்மனை கைது செய்தனர். காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட ஹரி பத்மன், ஜாமீன் கேட்டு சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் இந்த மனு 9வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் மோகனாம்பாள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாக அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மூர்த்தி, "200 மாணவர்கள் மற்றும் 20 ஆசிரியர்கள் உள்ள கல்லூரியில் தவறாக நடந்து கொண்ட ஹரி பத்மன் மீது மட்டும் மாணவிகள் புகார் அளித்தனர்.

கல்லூரி நிர்வாகத்தைப் பழிவாங்க மாணவிகள் புகார் அளித்ததாக ஹரி பத்மன் கூறுவதை ஏற்கக் கூடாது. பெற்றோர்கள் மற்றும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மீதான நம்பிக்கையை சிதைத்த ஹரி பத்மனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" என தெரிவித்தார். இதனையடுத்து ஹரி பத்மன் தரப்பில், "பாதிக்கப்பட்ட மாணவிகளுக்காக ஆஜராக மாதர் சங்கத்துக்கு உரிமை இல்லை. மாதர் சங்கத்தை இந்த வழக்கில் இணைக்கக் கூடாது.

ஹரி பத்மன், நடனப் பேராசிரியராக மாணவிகளுக்கு அசைவுகளை கற்றுத் தந்ததை, பாலியல் சீண்டல்களாக தவறாக சித்தரிக்கின்றனர். நிர்வாகத்தைப் பழிவாங்க பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஹரி பத்மனுக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இருக்கிறார்" என வாதிடப்பட்டது. தொடர்ந்து அரசு தரப்பில், "இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து மாணவிகள் புகார் அளித்து வருகின்றனர்.

காவல் துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட ஹரி பத்மனை காவல் துறை விசாரணைக்கு இன்னும் எடுக்கவில்லை. மேலும், கைது செய்து 15 நாட்கள் இன்னும் முடியாத நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதித்துறை நடுவர் மோகனாம்பாள், பேராசிரியர் ஹரி பத்மனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முன்னதாக மாநில மனித உரிமை ஆணைய விசாரணை பிரிவு எஸ்பி மகேஸ்வரன் தலைமையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தொடங்கி உள்ளது.

இதையும் படிங்க:கலாஷேத்ரா விவகாரத்தில் விசாரணையை தொடங்கியது மாநில மனித உரிமைகள் ஆணையம்!

Last Updated : Jun 11, 2023, 10:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details