தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2024 புத்தாண்டை வரவேற்க ரெடியாகும் தமிழ்நாடு மக்கள்..! போலீசார் பாதுகாப்பு தீவிரம்.. - புத்தாண்டு கொண்டாட்டம்

Happy New Year 2024: புத்தாண்டையொட்டி, தமிழ்நாடெங்கும் கொண்டாட்டங்கள் களைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்களின் சிறப்பு வழிபாட்டிற்கென தயாராகும் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Happy New Year 2024
2024 புத்தாண்டு கொண்டாட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 7:54 AM IST

Updated : Dec 31, 2023, 9:44 AM IST

சென்னை:ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டு இன்றுடன் முடிவடைந்து நாளை 2024 புதிய ஆண்டு பிறக்க உள்ளது. 2024 புதிய ஆண்டு பிறக்க உள்ள நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னை தொடங்கி இந்தியாவின் தலைநகரான டெல்லி வரை கொண்டாட்டங்கள் கலைகட்ட தொடங்கியுள்ளன.

பொதுவாக புத்தாண்டை வரவேற்கும் வகையில், பொதுமக்கள் நள்ளிரவில் வாணவேடிக்கைகளால் வர்ண ஜாலமிடுவதும், புத்தாண்டின் முதல் நாளில் புத்தாடை உடுத்தியும், ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கியும் தங்களுடைய அன்பை பரிமாறிக் கொள்வர். புத்தாண்டு என்றாலே சிறியவர் முதல் பெரியவர் வரை சொல்ல முடியாத அப்படி ஒரு ஆனந்தம், எல்லா வருடமும் எப்போதும் குறையாமல் இருக்கும்.

புத்தாண்டை வரவேற்க தயாராகும் தமிழகத்தின் தலைநகர்:சென்னையை பொருத்தவரை, புத்தாண்டு என்றாலே இளைஞர்களுக்கு தனி சந்தோஷம்தான். குறிப்பாக, சென்னையில் மிகப்பெரிய சுற்றுலா தலமான மெரினா கடற்கரையில் பல பகுதிகளிலிருந்து மக்கள் ஒன்று கூடுவார்கள். அது என்னவோ புத்தாண்டு தினமன்று மெரினா கடற்கரையில் கூடுவது (New Year celebration in Chennai Marina) சென்னை வாழ்மக்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த முறையும் மெரினா கடற்கரையில் மக்கள் கூடுவதற்கு அனுமதி உள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு மட்டும்தான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு வழிபாட்டிற்கு தயாராகும் வழிபாட்டு தலங்கள்: பொதுவாக, புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆடல்பாடல் என இருந்தாலும் எல்லா வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். சென்னையில் முக்கிய வழிபாட்டு தலங்களான சந்தோம் தேவாலயம், பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், வடபழனி முருகன் கோயில், மயிலை கபாலீஸ்வரர் கோயில், அண்ணா சாலையில் உள்ள பெரிய மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் மக்கள் தங்களுடைய பிரார்த்தனைகளை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வர்.

புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒளிந்திருக்கும் அந்த 'சந்தோஷம்' என்பது பிறக்கின்ற ஆண்டு அனைவருக்கும் இனிமையை அளிக்கும் ஆண்டாகவும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையால்தான்.

சென்னையில் பலத்த பாதுகாப்பு:இதனிடையே, சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக, 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், 'முக்கியமாக, புத்தாண்டை கொண்டாட்ட கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையின் கீழ் உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை (TSP) காவல் ஆளிநர்கள் என மொத்தம் 18,000 காவல் துறையினர் மூலம், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பு அளிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும், புத்தாண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர் மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணா நகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய இடங்களில் மொத்தம் 420 இடங்களில் வாகனத் தணிக்கை குழுக்களும், கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல்துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கைப் பதாகைகளும் பொருத்தப்பட்டு, கடலில் மூழ்கி உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிச.31 மாலை முதல் நாளை மறுநாள் (ஜன.1) வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள், குதிரைப்படைகள் மற்றும் ATV (All Terrain Vehicle) எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். குதிரைப்படைகள் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும்.

மேலும், அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவக் குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்.

மேலும், Mobile Surveillance Team எனப்படும் குழுக்கள் அமைக்கப்பட்டு, Tata Ace போன்ற வாகனங்களில் PA.System, Flickering Light போன்றவை பொருத்தியும், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனம் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:புத்தாண்டின்போது சென்னையில் பட்டாசு வெடிக்க தடை.. பாதுகாப்பு பணியில் 18,000 போலீசார்!

Last Updated : Dec 31, 2023, 9:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details