சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதி மற்றும் திட்ட அனுமதி பெறுபவர்கள், கட்டட மற்றும் திட்ட அனுமதியில் குறிப்பிட்டுள்ளவாறு அளவு மற்றும் விவரக்குறிப்பின் அடிப்படையில்தான் கட்டடங்களை கட்ட வேண்டும். அனுமதியில் குறிப்பிடப்படாத, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் கண்டறியப்பட்டு, கட்டட உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் குறிப்பாணை வழங்கப்படுகிறது.
அதேநேரம், தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட கட்டடத்தை மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்படும். அதன் அடிப்படையில், 15 மண்டலங்களிலும் கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட மாநகராட்சி பொறியாளர்களின் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில், அனுமதிக்கு மாறாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமான இடங்களில், 293 உரிமையாளர்களுக்கு கட்டுமானப் பணிகளை நிறுத்தவும், 170 உரிமையாளர்களுக்கு கட்டுமான இடம் பூட்டி சீல் வைக்கப்படும் எனவும் மாநகராட்சி சார்பில் குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கட்டுமான இடத்தை பூட்டி சீல் வைக்க குறிப்பாணை வழங்கி, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விதிமீறல்களை திருத்திக் கொள்ளாத 6 கட்டுமான இடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கட்டட அனுமதியின்படி திருத்தம் மேற்கொள்ளாத 591 கட்டுமான இடங்களில் இருந்த கட்டுமானப் பொருட்கள் மாநகராட்சி அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சென்னையின் 15 மண்டலங்களை 23 மண்டலங்களாக மாற்றும் பணி தீவிரம்