சென்னை:இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, மின்சார சேவைகளுக்கான கட்டண உயர்வு, ஆவின் பொருட்கள் விலை உயர்வு, பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பையும் தாண்டி ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியது,
பல்கலைக்கழக சான்றிதழ்களுக்கான கட்டண உயர்வு என்ற வரிசையில் போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களைப் பல மடங்கு வரை உயர்த்த தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளதாக வந்துள்ள செய்தி எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது.
மேலும் கரோனா கொடுந்தொற்று நோயின் பாதிப்பிலிருந்து ஓரளவு விடுபட்டு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருக்கையில், ஒருபுறம் அத்தியாவசியப் பொருட்கள், கட்டுமான பொருட்கள் ஆகியவற்றின் விலை விஷம் போல் உயர்ந்து கொண்டு வருவதும், மறுபுறம் அரசு தன் பங்கிற்குத் தொடர்ந்து வரிகளை விதித்துக் கொண்டிருப்பதும் மக்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாகன சோதனை மையங்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் கட்டணம் 1,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக அதாவது ஐந்து மடங்கு உயர்த்தவும், இந்த மையத்தின் அங்கீகாரத்தைப் புதுப்பித்தலுக்கான கட்டணம் 500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாக அதாவது ஆறு மடங்கு உயர்த்தவும்,
இந்த மையத்தைப் புதுப்பிப்பதற்கான தாமதக் கட்டணம் 100 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதாவது இரண்டு மடங்கு உயர்த்தவும், போக்குவரத்து ஆணையரின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு கட்டணம் 100 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக அதாவது ஐந்து மடங்கு உயர்த்தவும்,
சி.எப்.எக்ஸ் அறிவிப்பினை திரும்பப் பெறும் கட்டணம் 30 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக கிட்டத்தட்ட 16 மடங்கு உயர்த்தவும், தற்காலிகப் பதிவு மற்றும் தற்காலிகப் பதிவின் காலத்தை நீட்டிப்பு செய்தலுக்கான கட்டணம் 50 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக அதாவது நான்கு மடங்கு உயர்த்தவும், அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
பிற மண்டல வாகனங்களின் தகுதிச் சான்றுக்கான கட்டணம் ஏதுமில்லாத நிலையில் 500 ரூபாயாக நிர்ணயிக்கவும், ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல் பெறுவதற்கான கட்டணம் 75 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக அதாவது ஐந்து மடங்கிற்கு மேல் உயர்த்தவும், தகுதிச்சான்று நகல் பெறுவதற்கான கட்டணம் ஏதுமில்லாத நிலையில் 250 ரூபாயாக நிர்ணயிக்கவும்,