தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 19, 2019, 10:34 AM IST

ETV Bharat / state

பள்ளியில் முதுகலை ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிப்பு!

சென்னை: அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே. இளமாறன் கூறியுள்ளார்.

school

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் போதுமான முதுகலை ஆசிரியர்கள் இல்லாமல் மாணவ, மாணவியர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே. இளமாறன் பேசுகையில்,

"தமிழ்நாட்டில் ஐயாயிரத்து 317 அரசு, அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இந்தப் பள்ளிகளில் இந்தாண்டு மே 31ஆம் தேதி கணக்கின்படி இரண்டாயிரத்து 144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டதோடு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பாதிக்குமோ என்ற அச்சத்தில் உள்ளார்கள். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை தரமான கல்வி தந்திட மிகச்சிறப்பான பாடத்திட்டம் தயாரித்து வழங்கியுள்ளது. அதே வேளையில் அந்தப் பாடத்திட்டத்தினை மாணவர்களுக்கு கற்பித்திட ஆசிரியர்கள் இல்லாதது வருத்தமாக உள்ளது. புதிய பாடத்தினை முறையாக எடுத்துச் சென்றிட ஆசிரியர்கள் அவசியம்.

பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்தும் ஆசிரியர்கள் இல்லாத நிலையில் செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கவுள்ளன. இரண்டாயிரத்து 144 முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கான தேர்வு செப்டம்பர் 27இல் தொடங்கி 29ஆம் தேதி முடியும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளிவந்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்குள் பொதுத்தேர்வு வந்துவிடும்.

மேலும், அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். மாணவர்களின் நலன்கருதி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமித்திட வேண்டும்" என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details