தமிழ்நாடு

tamil nadu

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு?

By

Published : Jul 27, 2021, 11:30 AM IST

தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு விழுக்காட்டினை அதிகரிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

govt-school-student-medical-reservation-chances-to-increased
மருத்துவப்பபடிப்பில் மீண்டும் அதிகரிக்கும் இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை!

சென்னை:தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை விழுக்காட்டினை அதிகரிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வினால் மருத்துவப் படிப்பில் சேரும் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. அதனை சரி செய்யவும், நீட் தேர்வின் பாதிப்புகளில் இருந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் கடந்தாண்டு ஆணையம் அமைக்கப்பட்டது.

7.5 விழுக்காடு இடஒதுக்கீடு

அந்த ஆணையத்தின் பரிந்துரையின்படி, ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மாநில ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 விழுக்காடு இடங்களை முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் சட்டம், ஆளுநர் ஒப்புதலுடன் கடந்தாண்டு அக்டோபர் 30ஆம் தேதி அன்று இயற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான தர வரிசை தனியாக வெளியிடப்பட்டது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், 2020 நவம்பர் 18ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது.

அதில், முதற்கட்ட மருத்துவக் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாண்வர்கள் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் 399 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 4ஆம் தேதி நடைபெற்ற 2ஆம் கட்ட மருத்துவக் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 47 பேருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்தனர். கடந்தாண்டில் 446 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

ஏ.கே. ராஜன் தலைமையிலான ஆணையம்

இந்தநிலையில், தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்பு மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்த பாதிப்புகளை ஆராய்ந்து அளிக்கை அளிக்கவும், பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வகையில் , இம்முறைக்கு மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர்கள் சேர்க்கை முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், அவற்றின் சட்ட வழிமுறைகள் பற்றியும் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க உயர் நீதிமன்ற ஒய்வுப்பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.

அந்தக்குழுவினர் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து பொது மக்களிடம் இருந்து கருத்துகளை நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் கருத்துகளை பெற்றன. அப்போது 86, 342 மனுக்கள் வந்தன. அந்த மனுக்களையும், மருத்துவப்படிப்பில் நீட் தேர்வு வருவதற்கு முன், பின் சேர்ந்த மாணவர்களின் விபரங்கள் உள்ளிட்ட தரவுகளையும் ஆய்வு செய்ய உயர் நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு 4 முறை கூடி அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கையை தயார் செய்தது.

ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பு

அந்த அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் உயர் நீதிமன்ற ஒய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவினர் ஜூலை 14ஆம் தேதி அளித்தனர். 165 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், மருத்துவப் படிப்பில் நீட் தேர்வுக்கு முன்னர், பின்னர் ஏற்பட்ட பாதிப்புகள், ஏழை எளியவர்களுக்கு பாதிப்புகள், நகர்புறம், கிராப்புற மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் , மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வு தேவையில்லை எனவும், அதற்கு மாற்றாக பல்வேறு ஆலோசனைகளை கூறியுள்ளனர்.

அதன் அடிப்படையில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 10 விழுக்காடாக அதிகரிப்பதற்கும் அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மேலும், மாணவர்களை அதிகளவில் சேர்ப்பதற்கு தேவையான பல்வேறு திட்டங்களையும் அரசு வகுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:ஓமனிலும் நீட் தேர்வு மையம் வேண்டும் - பெற்றோர் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details