பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய் பேட்டி சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தைக்கு தவறான சிகிச்சை கரணமாக குழந்தையின் வலது கை அகற்றப்பட்டதாக குழந்தையின் பெற்றோர் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்த நிலையில், குழந்தையின் தாய் மருத்துவ அறிக்கையில் திருப்தி இல்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையின் பெற்றோர்களை சந்தித்தனர். அப்போது, "மருத்துவக் குழு மேற்கொண்ட விசாரணையில் தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை, மூளையில் ஏற்பட்ட தொற்று காரணமாக கை அகற்றப்பட்டதாக அறிக்கை வெளியிடபட்டுள்ளது. மேலும் மருத்துவர்களை விசாரித்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் எங்கள் அருகில் தங்கி இருந்தவர்களை விசாரிக்கவில்லை" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இருதய கோளாறு இல்லை இருதயம் சீராக உள்ளது என மருத்துவர்கள் கூறி உள்ள நிலையில் இதில் இருதய கோளாறு என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (2.7.2023) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குழந்தையின் கை சனிக்கிழமை (1.7.2023) தான் 2 மணி நேரத்தில் கை அழுகியதாக கூறினார். ஆனால் நான் 29 ஆம் தேதி வியாழன் அன்று கை சிவந்து காணப்பட்டதாக கூறியதையே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அன்று எந்த சிகிச்சையும் அளிக்கவில்லை. இந்த அரசாங்கம் பொதுமக்களுக்கு ஆதரவாக உள்ளதா? அல்ல அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக உள்ளதா" என கேள்வி எழுப்பினர்.
மேலும், "யாரிடம் இதற்கு மேல் முறையிடுவேன், யார் சொல்வது பொய், அரசாங்க சட்டையை போட்டுக்கொண்டு அரசு ஊழியர்கள் செய்யும் அட்டூழியத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வரை இந்த தவறு நடக்கும் என தெரிவித்த அவர், அறிக்கையில் எனது குழந்தைக்கு மூளையில் தொற்று ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தொற்று ஏற்பட்டது குறித்து எனக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை. தப்பிக்கும் நோக்கில் அப்பட்டமாக பொய் கூறுகின்றனர். மருத்துவர்கள் மருத்துவம் படித்து தான் வந்தார்களா?" என கேள்வி எழுப்பினார்.
எந்த நம்பிக்கையில் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குச் செல்வது என கூறிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை கண்காணிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக செவிசாய்க்கவில்லை என குற்றம் சாட்டினார். அடுத்த நடவடிக்கையாக மருத்துவக் கல்லூரி முதல்வரை சந்தித்து, எங்கள் குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் மற்றும் விசாரணை அறிக்கையும் அளிக்குமாறு கேட்க இருக்கிறோம்.
அதனை தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் கொடுத்து கருத்து கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்வோம் என தெரிவித்தார். மேலும் முடிவாக, "தமிழ்நாடு அரசு தவறு செய்தவர்கள் மீது நவடிக்கை எடுக்க வேண்டும். என் குழந்தைக்கு நடந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும், நிதி உதவி தேவையில்லை" என வேதனையுடன் கூறினார்.
இதையும் படிங்க:பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த வழக்கு : பாஜக நிர்வாகி வீடு இடித்து தரைமட்டம்!